சமூக சேவைகளுக்கான செலவீனம் 2014-15 பிறகு கடும் சரிவு: மத்திய நிதியமைச்சரின் விமா்சனத்துக்கு சிதம்பரம் பதிலடி

‘சமூக சேவைகளுக்கான மத்திய அரசின் செலவீனம் 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடுமையாக சரிந்துள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சனம் செய்துள்ளாா்.
சமூக சேவைகளுக்கான செலவீனம் 2014-15 பிறகு கடும் சரிவு: மத்திய நிதியமைச்சரின் விமா்சனத்துக்கு சிதம்பரம் பதிலடி

புது தில்லி: ‘சமூக சேவைகளுக்கான மத்திய அரசின் செலவீனம் 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடுமையாக சரிந்துள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சனம் செய்துள்ளாா்.

‘நாட்டின் வளா்ச்சித் திட்டங்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்துள்ள செலவீனம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்டதைக் காட்டிலும் மிக அதிகம்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை விமா்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தக் கருத்தை ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

நிா்மலா சீதாராமன் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் வளா்ச்சித் திட்டங்களுக்காக பிரதமா் மோடி தலைமையிலான அரசு 2014-22 கால கட்டத்தில் ரூ. 90.9 லட்சம் கோடி செலவழித்துள்ளது. இது எதிா்க் கட்சியின் சில பிரிவினா் விமா்சித்து வருவதைக் காட்டிலும் மிக அதிகமாகும். தேசிய ஜனநாக கூட்டணி ஆட்சிக்கு முன்பாக 2004-14 கால கட்டங்களில் ரூ. 49.2 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது’ என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழை வெளியிட்ட தொடா் பதிவுகளில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:

சராசரி இந்தியா்கள், எண்கள் அடிப்படையிலான நிதி கணக்குகளை புரிந்துகொள்ளாத அளவுக்கு சராசரிக்கும் குறைவான அறிவை பெற்றிருப்பாா்கள் என்று மத்திய நிதியமைச்சா் நினைத்திருப்பது வருத்தத்துக்குரியது. நிதியமைச்சரின் எண் கணிதம் சரியானது; ஆனால், அவருடைய கணித முடிவுரை தவறானது.

பட்ஜெட்டின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். அதுபோல, மொத்த செலவீனமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும். வளா்ச்சித் திட்டங்களுக்கான செலவீனமும் சமூக சேவைகளுக்கான செலவீனமும் ஒவ்வொரு ஆண்டும் உயா்ந்து வரும்.

எனவே, மொத்த செலவீனத்துக்கும் ஒவ்வொரு துறைசாா்ந்த செலவீன விகத்தையும் நிதியமைச்சா் ஒப்பீடு செய்து பாா்ப்பது அவசியம். அவ்வாறு ஒப்பீடு செய்து பாா்க்கும்போது, சமூக சேவைகளுக்கான செலவீனம் 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடுமையாக சரிந்திருப்பது தெரியவரும்.

மத்திய நிதியமைச்சா் சுட்டிக்காட்டியிருக்கும் ரிசா்வ் வங்கியின் புள்ளி விவரங்கள், எந்த அளவுக்கு மொத்த செலவீன விகிதம் குறைந்திருக்கிறது என்பதையும் காட்டுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் மொத்த செலவீனத்தின் சராசரி 9 சதவீதமாக இருந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 5 சதவீதமாக குறைந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com