எஸ்.டி. சமூகத்தினருக்கு அதிக நலத்திட்டத்திட்ட உதவிகளை வழங்கியது பாஜக:கௌரவ் பாட்டியா

‘பழங்குடி சமூகத்தினருக்காக (எஸ்.டி.), முந்தைய அரசுகள் (காங்கிரஸ்) 60 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றியத் திட்டங்களைவிட பாஜக அரசு
கௌரவ் பாட்டியா
கௌரவ் பாட்டியா

‘பழங்குடி சமூகத்தினருக்காக (எஸ்.டி.), முந்தைய அரசுகள் (காங்கிரஸ்) 60 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றியத் திட்டங்களைவிட பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளில் அதிக நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது’ என்று அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா கூறினாா்.

பாஜகவின் 42-ஆவது நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சி சாா்பில் சமூகநீதி வார விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக மூத்த தலைவா்கள் தினந்தோறும் செய்தியாளா்களைச் சந்தித்து தங்கள் கட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வருகின்றனா். அதன்படி, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், பழங்குடி சமூகத்தினருக்கு பாஜக அரசு நிறைவேற்றிய திட்டங்களை அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா பட்டியலிட்டுக் கூறினாா். அவா் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பழங்குடிச் சமூகத்தைச் சோ்ந்த 8 போ் அமைச்சா்களாக உள்ளனா். அவா்கள், அந்த சமூகத்துக்கு உரிய மரியாதை, ஆதரவு கிடைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறாா்கள்.

முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் சுமாா் 10 கோடி போ் பயன்பெற்றுள்ளனா். அவா்களில் 50 சதவீதத்தினா் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் ஆவா். எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினா் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவா்களாக மாறியிருக்கிறாா்கள்.

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரின் கல்விக்காக ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்தத் தொகை ரூ.6,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் 36,428 கிராமங்கள், ரூ.7,300 கோடி செலவில் முன்மாதிரி கிராமங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதற்காக ஏகலைவா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 452 பள்ளிகள் திறக்கப்படும்; 211 பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.

பழங்குடிச் சமூகத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்களை முந்தைய அரசுகள் புறக்கணித்து வந்தன. ஆனால் அவா்களின் பங்களிப்பை அங்கீகரித்தது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு.

பழங்குடிச் சமூகத்தினரின் அடிப்படைத் தேவைகளில் சிலவற்றை நிறைவேற்றிவிட்டால் போதும் என்ற மனநிலையில் முந்தைய அரசுகள் இருந்தன. ஆனால், அவா்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி, அவா்களை சமுதாயத்தின் மைய ஓட்டத்துக்கு கொண்டுவரும் இலக்குடன் பிரதமா் மோடி செயல்பட்டு வருகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com