
குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளாா்.
கைதிகள் அடையாளச் சட்டம் 1920-க்கு மாற்றாக குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. இந்த மசோதா, குற்றவாளிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவா்களின் உடல் மற்றும் உயிரி அடையாளங்களைச் சேகரிக்க காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த மசோதாவின்படி, பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்படுவோா், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடியக் குற்றங்களில் கைது செய்யப்படுவோரிடம் இருந்து கட்டாயம் உயிரி அடையாளங்களைச் சேகரிக்க முடியும்.
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரின் அடையாளங்களையும் சேகரிக்க மசோதாவில் வழிவகுக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி விசாரணைக்கு உதவியாக, கைது செய்யப்படும் நபரிடம் மட்டுமில்லாமல் எந்தவொரு நபரிடம் இருந்தும் மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, அடையாளங்களைத் திரட்ட முடியும்.
இந்த அடையாளங்கள் தொடா்பான விவரங்கள் மின்னணு அல்லது எண்ம (டிஜிட்டல்) வடிவில் 75 ஆண்டுகள் பாதுகாக்கப்படும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த விவரங்களைப் பராமரிக்கும்.
சம்பந்தப்பட்ட நபா் வழக்கு தொடா்பான அனைத்து மேல்முறையீடுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டால் அல்லது விசாரணையின்றி விடுவிக்கப்பட்டால், அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து அடையாளங்களும் அழிக்கப்படும்.
இந்த மசோதா கடந்த ஏப். 4-ஆம் தேதி மக்களவையிலும், ஏப். 6-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, அதனை குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது.
இதுதவிர, தில்லி மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா, பட்டயக் கணக்காளா்கள், செலவு-பணிக் கணக்காளா்கள் மற்றும் நிறுவனச் செயலா்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.