பாஜகவை புகழும் ஹிர்திக் படேல்: கலக்கத்தில் குஜராத் காங்கிரஸார்

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹிர்திக் படேல் பாஜகவை புகழ்ந்து பேசியிருப்பது அக்கட்சியினரைக் கலக்கமடையச் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹிர்திக் படேல் பாஜகவை புகழ்ந்து பேசியிருப்பது அக்கட்சியினரைக் கலக்கமடையச் செய்துள்ளது.

குஜராத் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக அறியப்படுபவர் ஹிர்திக் படேல். படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமடைந்த ஹிர்திக் படேல் கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  கடந்த 30 ஆண்டுகளாக குஜராத்தை பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சின் நம்பிக்கை முகங்களில் ஒருவராக ஹிர்திக் படேல் உள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் பாஜக குறித்து அவர் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தனியார் செய்தித்தாளுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியில், பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர்கள் இருப்பதால் அக்கட்சி வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹிர்திக் படேலின் இந்தக் கருத்து சொந்தக் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் அவர், “பாஜகவின் பலத்த நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் வலுவானவர்கள். அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, “எதிர்க்கட்சி என்ற வகையில், மக்கள் பிரச்னைகளை எழுப்புவதில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். எதிர்க்கட்சிகள் மக்களின் பிரச்னைகளை அரசாங்கத்தின் முன் கொண்டு சென்று, அதற்காக போராட வேண்டும். அதைச் செய்ய முடியாவிட்டால், மக்கள் மாற்று வழிகளைத் தேடுவார்கள்” என்றும், “நான் ராம பக்தர். என் தந்தையின் பிறந்தநாளில், பகவத் கீதையின் 4,000 பிரதிகளை விநியோகிப்பேன். நாங்கள் இந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றும் தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஹிர்திக் படேலின் கருத்துக்கு மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com