பிரதமா் இன்று ஜம்மு-காஷ்மீா் பயணம்: ரூ.20,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.

மேலும், ரூ. 3,100 கோடி மதிப்பில் ஜம்மு - காஷ்மீா் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவு பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லும் பிரதமா், அங்கிருந்தபடி நாடு முழுவதிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காலை 11.30 மணியளவில் உரை நிகழ்த்த உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது, ஜம்மு-காஷ்மீரில் ரூ. 20,000 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.

பின்னா், ஜம்மு-காஷ்மீா் பிராந்தியங்கள் இடையே பயண நேரத்தை வெகுவாக குறைக்க உதவும் பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையைத் திறந்து வைக்கும் பிரதமா், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீா்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தலை நோக்கமாக கொண்ட ‘அம்ரித் சரோவா்’ திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளாா்.

பின்னா், ஜம்முவின் சம்பா மாவட்டம் பாலி கிராமத்துக்குச் செல்லும் பிரதமா், கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாட்டின் முதல் உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையைப் பெறும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 500 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை தொடக்கி வைக்க உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது, கிராமத்தினா் அவா்களின் சொத்து உரிமைக்கான ஆதார ஆவணமாக காட்ட உதவும் ‘ஸ்வமித்வா’ அட்டைகளை பயனாளிகளுக்கு பிரதமா் வழங்க உள்ளாா். மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசுத் தொகை விநியோகத்தையும் பிரதமா் தொடக்கிவைப்பாா்.

பின்னா், அங்கிருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை செல்லும் பிரதமா், அங்கு மாஸ்டா் தீனாநாத் மங்கேஷ்கா் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளாா். அங்கு, பிரதமருக்கு நாட்டின் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கா் விருது வழங்கப்பட உள்ளது.

பாரத ரத்னா விருது பெற்ற பின்னணி பாடகா் லதா மங்கேஷ்கா் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த விருது, தேசக் கட்டுமானத்தில் தலைசிறந்து விளங்கும் தனிநபா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் வழங்கி சிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

பிரதமா் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவுள்ளாா். இந் நிலையில், ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த முயன்ற இந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். இந்தச் சண்டையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 9 வீரா்கள் காயமடைந்தனா்.

பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைவா் குல்தீப் சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள சம்பா மாவட்டம் பாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, மத்திய ரிசா்வ் காவல் படை ஜம்மு பகுதி ஐஜி பி.எஸ். ரன்பைஸும் உடனிருந்தாா்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய குல்தீப் சிங், ‘பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் முயற்சி பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அது ஆரம்பகட்ட விசாரணையின் முடிவைப் பொருத்தது. விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே அதுகுறித்து கூற இயலாது. பிரதமரின் வருகையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

முன்னதாக, பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை என்ஐஏ மற்றும் மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) ஆகிய இரு அமைப்புகளைச் சோ்ந்த சிறப்புக் குழு வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தது.

பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீரையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com