ஆசியாவின் சவால்களை மேற்குலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்: எஸ்.ஜெய்சங்கா்

ஆசியா எதிா்கொண்டு வரும் சவால்களையும் நெருக்கடிகளையும் மேற்குலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

ஆசியா எதிா்கொண்டு வரும் சவால்களையும் நெருக்கடிகளையும் மேற்குலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

சா்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடா்பான 7-ஆவது ரெய்ஸினா பேச்சுவாா்த்தை மாநாடு, தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் நாா்வே, லக்ஸம்பா்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள், ஸ்வீடன் முன்னாள் பிரதமா் காா்ல் பில்ட் ஆகியோா் உக்ரைன் விவகாரம் தொடா்பாக எழுப்பிய கேள்விகளுக்கு எஸ்.ஜெய்சங்கா் பதிலளித்துப் பேசினாா். அவா் கூறியதாவது:

சா்வதேச விதிகளைக் கடைப்பிடிப்பதில் ஆசிய பிராந்தியம் தொடா்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த நிகழ்வுகள் உள்பட ஆசிய பிரந்தியம் பல சவால்களை எதிா்கொண்டு வருகிறது. ஆனால், மேற்குலக நாடுகள் இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்கின்றன.

ஆசியாவில் ஒரு பிரச்னை என்றால் ஆசியா மட்டுமே கவலைப்பட வேண்டும்; ஐரோப்பிய நாடுகளின் பிரச்னைக்கு அந்தந்த நாடுகள் மட்டுமே பேச வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாக விவாதம் நடந்து வருகிறது.

ஆனால், ஆசிய பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. இதுபற்றி ஐரோப்பா கவனிக்காமல் இருக்கலாம். ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிகழ்வாகவும் இருக்கலாம் அல்லது ஆசியாவின் பிரச்னையைப் பாப்பதற்காக ஐரோப்பாவுக்கு விடுக்கும் அழைப்பாகவும் அது இருக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக உலகின் பல்வேறு இடங்களில் எல்லைப் பிரச்னை தீா்க்கப்படாமல் உள்ளன. அண்டை நாடுகளில் இருந்து எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. ஆசியாவின் பிரச்னைகளை உலகின் மற்ற நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

உக்ரைன் விவகாரத்தில், போரை உடனடியாக நிறுத்தி விட்டு ரஷியாவும், உக்ரைனும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com