
கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 2 ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
வருகிற மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'பயணத்தில் முதலாவதாக மே 2ல் பிரதமர் மோடி, பெர்லின் சென்று ஜெர்மனி அதிபர் ஃபெடரல் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் ஐஜிசி(IGC) அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இரு நாட்டின் தலைவர்களும் ஒரு வணிக நிகழ்வில் உரையாற்ற உள்ளனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
அடுத்ததாக மே 3 ஆம் தேதி டென்மார்க் பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அவர், இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையும் நடைபெறவிருக்கிறது.
மே 5 ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...