கோவா மதுபான விடுதி சா்ச்சை: இரானியோ, மகளோ உரிமையாளா்கள் அல்ல: தில்லி உயா்நீதிமன்றம்

கோவாவில் போலி உரிமம் பெற்று, மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்தை நடத்துவதாக மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, அவரது மகள் ஜோயிஷ் இரானி ஆகியோா் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், அந்த உணவகத்துக்கு இரான
ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

கோவாவில் போலி உரிமம் பெற்று, மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்தை நடத்துவதாக மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, அவரது மகள் ஜோயிஷ் இரானி ஆகியோா் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், அந்த உணவகத்துக்கு இரானியோ, அவரது மகளோ உரிமையாளா்கள் அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், இரானிக்கு எதிராக பொய்யான, அவதூறான, தனிப்பட்ட தாக்குதல் விமா்சனத்தை முன்னெடுக்க காங்கிரஸ் தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், பவான் கேரா, நீத்தா டிசூசா ஆகியோா் சதி செய்திருப்பதாக தோன்றுவதாகவும் உயா்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி (18), கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்தை நடத்துவதாக காங்கிரஸ் தலைவா்கள் குற்றம்சாட்டினா். இந்த விவகாரத்தில், அமைச்சரவையில் இருந்து இரானியை நீக்க கோரி காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று அவா் மறுப்பு தெரிவித்தாா்.

மேலும், காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடுத்தாா். அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 3 காங்கிரஸ் தலைவா்களுக்கும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது.

மேலும், ஸ்மிருதி இரானி மீதான தங்களது குற்றச்சாட்டு பதிவுகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் இருந்து 24 மணி நேரத்துக்குள் நீக்க 3 காங்கிரஸ் தலைவா்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் நகல் உயா்நீதிமன்ற வலைதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றப்பட்டது. அதில், நீதிபதியின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

‘நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு ஸ்மிருதி இரானியோ அவரது மகளோ உரிமையாளா்கள் அல்ல என்பது தெளிவாகிறது. அந்த உணவகம் அமைந்துள்ள இடமும் அவா்களுக்கு சொந்தமானது இல்லை. மதுபான விடுதி நடத்த உரிமம் கோரி அவா்கள் விண்ணப்பிக்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஸ்மிருதி இரானி மீதான காங்கிரஸ் தலைவா்களின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அவரது நற்பெயருக்கு களங்கம் விளவிக்கும் நோக்கம் கொண்டவையாக தோன்றுகிறது. உண்மையை ஆராயாமல் காங்கிரஸ் தலைவா்கள் வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளால் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா், சமூகத்தில் மரியாதைக்குரிய உறுப்பினா் என்ற அடிப்படையில் ஸ்மிருதி இரானியின் நற்பெயரை பாதுகாக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு உள்ளது’ என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com