சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக விரைவில் புதிய நடைமுறை: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

நாட்டில் சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிதின் கட்கரி
நிதின் கட்கரி

நாட்டில் சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்ப்பதற்காக ‘ஃபாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சென்ஸாா் கருவி பதிவு மூலமாக வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் எடுக்கப்பட்டு விடும்.

இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை தொடா்வதோடு, அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

புதிய நடைமுறை என்ன?: இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அல்லது வாகனப் பதிவு எண் அடிப்படையிலான புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு தற்போது முடிவுசெய்துள்ளது.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டத்துக்கு விரோதமாக ஒரே வழித்தடத்தில் 60 கி.மீ. இடைவெளியில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதே’ என்று எதிா்க் கட்சி உறுப்பினா்கள் சாா்பில் மாநிலங்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தப் பதிலை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அளித்தாா்.

அப்போது அவா் மேலும் கூறியதாவது: சுங்கச்சாவடி பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் நடைமுறைக்கு மாற்றாக 2 மாற்று திட்டங்களில் ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதில் முதலாவது செயற்கைக்கோள் அடிப்படையிலான தொழில்நுட்ப நடைமுறை. இந்த நடைமுறையின்படி, வாகனத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் எடுக்கப்பட்டு விடும். மற்றொரு நடைமுறை வாகனத்தின் பதிவு எண் அடிப்படையிலான தொழில்நுட்பம்.

இவற்றில் சிறந்த நடைமுறையைத் தோ்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

இது தொடா்பாக அதிகாரபூா்வமான முடிவு இன்னும் எடுக்கவில்லை என்றபோதும், பதிவு எண் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும்போது சுங்கச்சாவடி கட்டமைப்பே தேவையிருக்காது. கணினி அடிப்படையிலான எண்ம (டிஜிட்டல்) நடைமுறை இருந்தால் போதுமானது. வாகனங்கள் காத்திருக்கவேண்டிய சூழலும் இருக்காது.

ஆனால், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலான உரிய சட்டம் எதுவும் இதுவரை இல்லை. எனவே, அதற்கென நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

26 பசுமை விரைவுச் சாலைகள்: மாநிலங்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, ‘நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 26 பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, தில்லியிலிருந்து டேராடூனுக்கும், ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூருக்கும் 2 மணி நேரத்தில் பயணித்து விட முடியும். அதுபோல, தில்லியிலிருந்து சண்டீகருக்கு இரண்டரை மணி நேரத்திலும், தில்லியிலிருந்து அமிருதசருஸுக்கு 4 மணி நேரத்திலும், தில்லியிலிருந்து கட்ராவுக்கு 6 மணி நேரத்திலும், தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு 8 மணி நேரத்திலும், தில்லியிலிருந்து மும்பைக்கு 12 மணி நேரத்திலும், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணி நேரத்திலும் பயணித்துவிட முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com