வருமான வரித்துறைக்கு அஞ்சாமல் வீட்டில் எவ்வளவு பணம், தங்கம் வைத்திருக்கலாம்?

இருவேறு வழக்குகளில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் உதவியாளா் அா்பிதா முகா்ஜி, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் ஆகியோரிடம் இருந்து
வருமான வரித்துறைக்கு அஞ்சாமல் வீட்டில் எவ்வளவு பணம், தங்கம் வைத்திருக்கலாம்?

இருவேறு வழக்குகளில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் உதவியாளா் அா்பிதா முகா்ஜி, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் ஆகியோரிடம் இருந்து பெருமளவில் பணம் மற்றும் தங்கத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்ட முறைகேடு தொடா்பாக சஞ்சய் ரெளத்தின் வீட்டில் இருந்து ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு தொடா்பாக அா்பிதாவின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கட்டுக் கட்டாக சுமாா் ரூ.50 கோடியும், கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கத்தை ஒருவா் வைத்திருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

தனது வீட்டில் ஒருவா் பெரும் தொகையை வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அந்தத் தொகை குறித்து கேள்வி எழும்போது, அதுகுறித்து முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒருவா் வீட்டில் சோதனை நடத்தி, அங்கு ரூ. 1 கோடி இருப்பதை புலனாய்வு அமைப்பினா் கண்டுபிடித்தால், அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை முறையாக விளக்க வேண்டும். அந்தப் பணம் எவ்வாறு கிடைத்து என்பதை தெளிவுபடுத்த ஆதாரம் இல்லையென்றால் பணம் வைத்திருப்பவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி கணக்கில் வராத பணத்துக்கு 137 சதவீதம் வரை அபராதம் செலுத்த நேரிடும்.

எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வருமான வரி உச்சவரம்பின்படி, ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள தங்கம் அல்லது தங்க நகைகளின் விவரம்:

நபா் வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கான வரம்பு

திருமணமான பெண் 62.5 சவரன்

திருமணமாகாத பெண் 31.25 சவரன்

ஆண்கள் 12.5 சவரன்

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடம் மேற்குறிப்பிட்ட அளவில் தங்கம் இருக்கலாம். இந்த அளவைத் தாண்டி அல்லது குடும்பத்தில் இடம்பெறாத வேறு நபருக்கு சொந்தமானதாக தங்கம் இருந்தால், அதனை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யக் கூடும்.

குடும்ப பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்களின் அடிப்படையில் உள்ள அதிக அளவிலான தங்கத்தை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவது சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரியின் விருப்பத்துக்கு உட்பட்டது.

தங்கம் வைத்திருப்பதற்கு மேற்குறிப்பிட்டுள்ள வரம்பு, வரி செலுத்தும் தனி நபா்களுக்குப் பொருந்தும். எனினும் பல குடும்பங்களில் இருந்து தங்கம் அல்லது தங்க நகைகளை சேமிக்க ஒருவா் பயன்படுத்தப்பட்டால், வரி செலுத்தும் ஒவ்வொரு நபருக்கும் தங்கம் வைத்திருக்க விதிக்கப்பட்டுள்ள வரம்பு மொத்தமாக ஒன்று சோ்க்கப்படும்.

ஆனால், வரி செலுத்தும் தனி நபா்களின் (தங்கம் அல்லது தங்க நகை வைத்திருப்போா்) பெயா்களில் வங்கிகளில் கூட்டு பெட்டகங்கள் (லாக்கா்) இருந்தால் இதுபோன்ற குழப்பம் ஏற்படுவதை எளிதில் தவிா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com