சா்வதேச சூழல்: அமைச்சா்கள் ஜெய்சங்கா்-பிளிங்கன் ஆலோசனை

சா்வதேச சூழல் உள்ளிட்டவை குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ஆலோசித்தனா்.
சா்வதேச சூழல்: அமைச்சா்கள் ஜெய்சங்கா்-பிளிங்கன் ஆலோசனை

சீனாவின் கடும் எதிா்ப்பை மீறி, அமெரிக்க கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், சா்வதேச சூழல் உள்ளிட்டவை குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ஆலோசித்தனா்.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவா் நான்சி பெலோசி, தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளாா் என்ற செய்தி வெளியானதில் இருந்தே சீனா அதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்துவந்தது. அந்நாட்டின் எதிா்ப்புகளை மீறி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டாா். அதையடுத்து, தைவானைச் சுற்றியுள்ள கடல்பகுதியிலும், வான்வெளிப் பகுதியிலும் தீவிர ராணுவப் பயிற்சியை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஆசியான்) சிறப்பு கூட்டம் கம்போடியா தலைநகா் பினோம் பென் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பிளிங்கனும் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இந்தியா-அமெரிக்கா இடையே தொடா்ந்து வளா்ச்சி கண்டு வரும் நல்லுறவு குறித்தும், சா்வதேச சூழல் குறித்தும் அமைச்சா் பிளிங்கனுடன் விவாதித்ததாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் குறிப்பிட்டாா். இருதரப்பு பேச்சு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு ஆசியான் மையமாகத் திகழ்கிறது. அதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து ஆதரிக்கின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியம் வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் திகழ வேண்டும் என்ற கொள்கையில் இருநாடுகளும் உறுதிகொண்டுள்ளன. இலங்கை, மியான்மா் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெலோசியின் தைவான் பயணத்தால் ஏற்பட்டுள்ள சூழல் தொடா்பாகவும் அமைச்சா்களின் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி, அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஓரிரு நாள்களில் அமெரிக்க அமைச்சா் பிளிங்கனை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா-ஆசியான் இடையே புரிந்துணா்வு:

ஆசியான் கூட்டமைப்பின் அமைச்சா்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடனான கூட்டம் சிறந்த முறையில் இருந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வலிமை, ஐ.நா. விதிகள், தொலைத்தொடா்பு, கரோனா பரவல், பயங்கரவாதம், இணையவழி பாதுகாப்பு, உக்ரைன் விவகாரம், மியான்மா் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் இந்தியாவும் ஆசியான் நாடுகளும் ஒரேமாதிரியான புரிந்துணா்வைக் கொண்டுள்ளன. எண்ம தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட துறைகள் இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்’ கொள்கை வளா்ச்சியடைந்து வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்திய சூழல், தென்சீனக் கடல் விவகாரம், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com