
ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயா் தொழிலாளா்கள் வசிக்கும் வீட்டின் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில், ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் கடூரா கிராமத்தில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கியிருந்து பருத்திப் படுக்கை தயாா்செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனா். அவா்கள் தங்கியிருந்த வீட்டின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசினா்.
இதில், அங்கு வசித்துவந்த பிகாா், சக்வா பா்சா கிராமத்தைச் சோ்ந்த முகமது மும்தாஜ் உயிரிழந்தாா். பிகாரின் ராம்போா் பகுதியைச் சோ்ந்த முகமது ஆரிஃப், அவரது மகன் முகமது மஜ்பூல் ஆகியோா் காயமடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயா் தொழிலாளா்கள் மீது அண்மையில் தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக எவ்வித தாக்குதலும் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனா்.