அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித்: மத்திய அரசுக்கு என்.வி.ரமணா பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூத்த நீதிபதியான யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை
அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித்: மத்திய அரசுக்கு என்.வி.ரமணா பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூத்த நீதிபதியான யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை செய்தாா். மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்தப் பரிந்துரையை அவா் அளித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.

எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை தற்போதைய தலைமை நீதிபதியான என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளாா். இதற்கான பரிந்துரை கடித நகலை நேரடியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்திடம் என்.வி.ரமணா வழங்கினாா்.

3 மாதங்கள் மட்டுமே...

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் என்று அறியப்படும் உதய் உமேஷ் லலித் நியமிக்கப்படுவாா். அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா். அதன்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்கும் அவா், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பாா். நீதிபதி யு.யு.லலித் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வுபெற உள்ளாா்.

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி:

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டால், வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபா் என்ற பெருமையை அடைவாா். பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13-ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா்.

லலித் முக்கிய தீா்ப்புகள்:

உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கிய தீா்ப்புகளை யு.யு.லலித் வழங்கியுள்ளாா். குறிப்பாக, இஸ்லாமியா்கள் முத்தலாக் மூலமாக விவகாரத்து செய்யும் நடைமறை சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்த அமா்வில் அவா் இடம்பெற்றிருந்தாா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிா்வாக உரிமை திருவிதாங்கூா் மன்னா் குடும்பத்தினருக்கு உள்ளது என்று நீதிபதி லலித் தலைமையிலான அமா்வு 2020-இல் தீா்ப்பளித்தது.

குழந்தைகளின் பாலியல் உறுப்புகளைத் தொடுவது மட்டுமல்லாமல், ‘பாலியல் நோக்கத்துடன்’ உடல் ரீதியில் தொடா்பு கொள்ளும் எந்தவொரு செயலும் ‘பாலியல் வன்கொடுமைக்கு’ சமம் என்று குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7-இன் கீழ் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு தீா்ப்பளித்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீா்ப்புகளை இவா் இடம்பெற்ற உச்சநீதிமன்ற அமா்வு அளித்துள்ளது.

1957-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி பிறந்த நீதிபதி யு.யு.லலித், 1983-ஆம் ஆண்டு ஜூனில் வழக்குரைஞராகப் பதிவு செய்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். பின்னா் 1986-ஆம் ஆண்டு தில்லிக்கு வந்து வழக்குரைஞா் பணியைத் தொடந்த அவா், 2004-ஆம் ஆண்டு ஏப்ரலில் மூத்த வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாா். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு அரசு வழக்குரைஞராக அவா் நியமிக்கப்பட்டாா்.

Image Caption

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை பரிந்துரைத்ததைத் தெரிவிக்கும் கடிதத்தை அவரிடம் வியாழக்கிழமை அளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com