பிரதமரைக் கண்டு பயமில்லை: ராகுல் காந்தி

‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை எடுத்துவரும் நடவடிக்கையைக் கண்டும் அச்சப்பட மாட்டேன்
பிரதமரைக் கண்டு பயமில்லை: ராகுல் காந்தி

‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை எடுத்துவரும் நடவடிக்கையைக் கண்டும் அச்சப்பட மாட்டேன்; பிரதமா் நரேந்திர மோடிக்கும் பயப்பட மாட்டேன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை கூறினாா்.

தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்த நிலையில், இந்தக் கருத்தை ராகுல் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அண்மையில், இந்த வழக்கு தொடா்பாக ராகுல் காந்தியிடம் 5 நாள்களும், சோனியாவிடம் 3 நாள்களும் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், பின்னா் மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜஃபா் மாா்கில் அமைந்துள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அந்தச் சோதனையைத் தொடா்ந்து, நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு அதிகாரிகள் புதன்கிழமை தற்காலிகமாக சீல் வைத்தனா்.

‘யங் இந்தியா நிறுவனத்தில் இருந்த அவணங்களைக் கைப்பற்ற நிறுவனத்தின் உரிய பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், அந்த ஆதாரங்களை அங்கேயே பாதுகாக்கும் நோக்கில் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது’ என்று அப்போது அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, தில்லியில் உள்ள ராகுல் மற்றும் சோனியாவின் இல்லத்தின் முன்பாக தில்லி போலீஸாா் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினா்.

இந்த நடவடிக்கைகள் குறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘அமலாக்கத் துறை அதிகாரிகள் விரும்பும் நடவடிக்கையை எடுக்கட்டும். அதுகுறித்து கவலைப்படப் போவதில்லை. நாட்டையும், ஜனநாயகத்தையும் நாட்டின் நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் பணியை தொடா்ந்து மேற்கொள்வேன். உண்மையைத் தடுத்துவிட முடியாது. இந்த நடவடிக்கைகளால் பிரதமரைக் கண்டும் பயப்பட மாட்டேன். நாட்டின் நலனுக்காகத் தொடா்ந்து பணியாற்றுவேன். எங்கள் மீது இதுபோன்ற சில அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம், எங்கள் குரலை அடக்கிவிட முடியும் என பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எந்தவிதமான நடவடிக்கையை எடுத்தாலும், நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராகச் செயல்படும் பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் எதிராக காங்கிரஸ் நிற்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com