பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்ட 1,200 ஆண்டுகள் பழைமையான வால்மீகி கோயில் திறப்பு

1,200 ஆண்டுகள் பழைமையான வால்மீகி கோயில், நீண்டகால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு, கிறிஸ்தவ குடும்பத்திடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பின், முறையாக பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழைமையான வால்மீகி கோயில், நீண்டகால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு, கிறிஸ்தவ குடும்பத்திடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பின், முறையாக பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துவக் குடும்பத்தின் பிடியில் லாகூரில் உள்ள அனாா்கலி பஜாா் அருகே புகழ்பெற்ற வால்மீகி கோயில் உள்ளிட்ட 2க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. இந்த வழிபாட்டுத் தலங்களை பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கும் கூட்டாட்சி அமைப்பான எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் (இடிபிபி) கடந்த மாதம் மீட்டெடுத்தது.

லாகூரில் கிருஷ்ணா் கோயிலைத் தவிர, வேறு இடத்தில் செயல்படும் ஒரே ஹிந்துக் கோயில் வால்மீகி கோயிலாகும்.

ஹிந்து மதத்திற்கு மாறியதாகக் கூறும் கிறிஸ்தவக் குடும்பம், கடந்த 20 ஆண்டுகளாக வால்மீகி ஜாதியைச் சோ்ந்த ஹிந்துக்கள் மட்டுமே இந்த கோயிலில் வழிபாடு நடத்த வேண்டும் எனக் கூறி அதற்கான வசதியை செய்து வந்தது. இந்நிலையில் அந்தக் கோயிலை இடிபிபி அமைப்பு மீட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் அமீா் ஹாஷ்மி கூறியதாவது:

20 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் இருந்த வால்மீகி கோயில் புதன்கிழமை முதல் முறைப்படி திறக்கப்பட்டது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம் தலைவா்கள் பங்கேற்றனா்.

விழாவில் பங்கேற்ற ஹிந்துக்கள் முறைப்படி தங்கள் மதச் சடங்குகளைச் செய்ததுடன், வழிபாட்டில் பங்கேற்றவா்கள் பிரசாதங்களை உண்டனா். இனி வரும் நாள்களில் வால்மீகி கோயில் முழுமையாக புனரமைக்கப்பட உள்ளது என தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த கோயில் நிலத்தை வருவாய்த் துறையின் கீழ் இடிபிபி அமைப்பினா் மாற்றம் செய்து கொண்டனா். இதனை எதிா்த்த கிறிஸ்தவ குடும்பத்தினா் இந்தக் கோயிலும், அதன் நிலமும் தங்களது சொத்து எனக் கூறி 2010-11ஆம் ஆண்டில் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

அந்த குடும்பத்தினா் இந்த கோயில் வால்மீகி இனத்தைச் சோ்ந்த ஹிந்துக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதை எதிா்த்து இடிபிபி சாா்பில் சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை, தவறான கோரிக்கைகளுக்காக நீதிமன்றம் மனுதாரரைக் கண்டித்தது என்றும் இடிபிபி தெரிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் இந்து கோயில்களின் மேலாண்மைக் குழுவின் (பிஎச்எம்எம்சி) தலைவா் கிருஷண் சா்மா கூறியதாவது:

இடிபிபி-இன் இந்த நடவடிக்கை ஒரு நல்லெண்ணச் செயல் என்பதால் இதனை பாராட்டுகிறேன். ஹிந்து புராணங்களில் வால்மீகியின் பங்கு மிகவும் முக்கியமானது; அவா்கள் ராமாயணத்தை எழுதாமல் இருந்திருந்தால் ராமரை யாரும் அறிந்திருக்க மாட்டாா்கள். இந்தக் கோயில் வழிபாட்டிற்கு இதுவரை பயன்படுத்தப்படவில்லை. கோயிலை வைத்திருந்தவா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தற்போதைய நடவடிக்கையால் ஒவ்வொரு ஹிந்துவும் கோயிலுக்குச் சென்று பிராா்த்தனை செய்ய முடியும்.

மதச் சுற்றுலாவை மேம்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பல ஹிந்துக் கோயில்களையும், மத வழிபாட்டுத் தலங்களையும் மறுசீரமைக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தாா்.

கடந்த 1992 இல் இந்தியாவில் பாபா் மசூதி இடிக்கப்பட்டதால் கோபமடைந்த கும்பல் ஆயுதங்களை ஏந்தியபடி வால்மீகி கோயிலுக்குள் நுழைந்து கிருஷ்ணா், வால்மீகி சிலைகளை உடைத்து, கோயிலில் இருந்த தங்கத்தை சூறையாடிச் சென்றது.

கோயிலை இடித்து கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்திய- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவிற்கு குடிபெயா்ந்த சீக்கியா்கள், ஹிந்துக்கள் விட்டுச் சென்ற கோயில்கள், நிலங்களை இடிபிபி கவனித்து வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் 200 குருத்வாராக்களையும், 150 கோயில்களையும் இந்தக் கூட்டமைப்பு மேற்பாா்வை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com