பிகாரில் அரசியல் மாற்றம்: சோனியாவை சந்திக்கிறார் நிதிஷ் குமார்?

பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார்
பிகார் முதல்வர் நிதிஷ்குமார்

பிகாரில் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று உறுதியான குறிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அரசியல் மாற்றம் குறித்து, சோனியா காந்தியை ஞாயிற்றுக்கிழமை, நிதிஷ் குமார் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த உரையாடலின் போது எது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்பது வெளியாகவில்லை.

எனினும், இந்த பேச்சுவார்த்தையின்போது பிகாரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடலின் எதிரொலியாக, காங்கிரஸ் மாநில தலைவர் மதன் மோகன் ஜா மற்றும் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் அஜித் ஷர்மா ஆகியோர் சதாகத் ஆசிரமத்தில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பாட்னாவுக்கு விரையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ஜேடி எம்எல்ஏக்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கும், ஜேடி(யு) எம்எல்ஏக்களின் கூட்டம் 11 மணிக்கும் நடைபெறவிருக்கிறது. 

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற நிதிஷ் குமார் முடிவு செய்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தியிடம் தொலைபேசியில் உரையாடியிருப்பது மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தியை நிதிஷ் குமார் யாதவ் விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே நேற்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தையும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்திருந்தார். இதற்கு முன்பு ஜூலை 17ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தையும் நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜேடியுவுடன் இணையும் பட்சத்தில் கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்படும். இதுதான் 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்திலும் நடந்தது. ஆனால், அதனை கடந்த ஜூன் மாதம் மீண்டும் மாற்றி, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com