பிகார் முதல்வராக நிதீஷ் குமார்; துணை முதல்வராக தேஜஸ்வி பதவியேற்பு

பிகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
பிகார் முதல்வராக நிதீஷ் குமார்; துணை முதல்வராக தேஜஸ்வி பதவியேற்பு

பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், தனது முதல்வா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்த நிலையில், முதல்வராக இன்று மீண்டும் நிதீஷ் குமார் பதவியேற்றார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, முதல்வராக நிதீஷ் குமாருக்கும், துணை முதல்வராக தேஜஸ்விக்கும் ஆளுநர் ஃபாகு சௌஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணி முறிவை நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதென முடிவெடுக்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

அதையடுத்து, ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் ஃபாகு சௌஹானிடம் தனது ராஜிநாமா கடிதத்தை நிதீஷ் குமாா் வழங்கினாா். கட்சித் தொண்டா்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்ததாக அவா் தெரிவித்தாா்.

பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டால் நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தெரிவித்திருந்தது. அதன்படி, முதல்வா் நிதீஷ் குமாா் ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமா்ப்பித்த பிறகு, முன்னாள் முதல்வா் ராப்ரி தேவியின் இல்லத்தில் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்டோா் நிதீஷை சந்தித்துப் பேசினா். அப்போது, தனது கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை நிதீஷ் குமாரிடம் தேஜஸ்வி வழங்கினாா்.

‘மகா கூட்டணி’யில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதீஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தன. கூட்டணியின் தலைவராகவும் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

எதிா்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்ததையடுத்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநா் ஃபாகு சௌஹானிடம் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை மாலை உரிமை கோரினாா். 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்த நிதீஷ் குமாா், அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com