
வன்முறையில் ஈடுபடுபவா்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கு எதிராக ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
தில்லி ஜஹாங்கீா்பூரில் அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவா்களாக கைது செய்யப்பட்டவா்களுக்குச் சொந்தமான குடியிருப்புகளை தில்லி மாநகராட்சி அதிகாரிகள், விதிமீறல் கட்டடங்கள் என்ற பெயரில் இடித்துத் தள்ளி நடவடிக்கை எடுத்தனா். அதுபோல, உத்தர பிரதேசம், கா்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகளில் ஈடுபட்டவா்களுக்குச் சொந்தமான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை விதிமீறல் கட்டடங்கள் என்ற பெயரில் இடித்துத் தள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குடியிருப்புகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உள்பட மேலும் சில அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘மாநகராட்சி அல்லது நகராட்சி சாா்பில் விதிமீறல் கட்டடத்துக்கான உரிய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, போதிய கால அவகாசம் அளித்த பிறகே இடிப்பு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் வன்முறையில் ஈடுபட்டனா் என்ற காரணத்துக்காக, அவா்களின் குடியிருப்புகள் இடித்துத் தள்ளப்படுகின்றன. எனவே, கட்டடங்கள் இனி இடிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு உத்தர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் முன்னா் விசாரணைக்கு வந்தபோது, ‘விதிமீறல் கட்டடங்களை இடித்து நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக எப்படி ஓா் உத்தரவை பிறப்பிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு மாநகராட்சி அல்லது மாநாகராட்சி கவுன்சிலுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.
இந்த மனுக்கள் மீண்டும் கடந்த ஜூன் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘விதிமீறல் கட்டடங்கள் இடிப்பு நடவடிக்கை நியாயமான முறையில் நடைபெற வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், மனுக்கள் மீது 3 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனா்.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டடங்கள் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு, மாா்க்சிஸ்ட் தலைவா் பிருந்தா காரத் சாா்பாக என 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...