இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 
இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு


இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்து, 76 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. சுதந்திர நாள் அமுத பெருவிழாவாக ஓராண்டாக கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி மும்மு உரையாற்றினார். 

அப்போது, இந்திய சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி. இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் நமது நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசத்திற்கு உரையாற்றும் வகையில், சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதை சாத்தியமாக்கிய அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவு கூர்கிறேன். அனைவருக்கும் தலைவணங்குகிறேன். 

கரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்னைகளை சந்தித்த போது இந்தியா அதிலிருந்து விரைவில் மீண்டதை உலகம் பார்த்திருக்கிறது.  பெருந்தொற்றுக்கு எதிரான நமது செயல்கள் எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை கொண்டு மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் முடுக்கி விட்டு மிகப்பெரிய சாதனை செய்துள்ளோம். 

கடந்த மாதம் 200 கோடி தடுப்பூசிகளை செலுத்தி பல வளர்ந்த நாடுகளை விட முன்னோக்கிச் சென்றுள்ளோம்.

பெருந்தொற்றுடனான நமது போராட்டம் பல முன்னேறிய நாடுகளை விட மேம்பட்டதாகவே நமது சாதனைகள் இருந்திருக்கின்றன.  இந்தச் சாதனையின் பொருட்டு, நாம் நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தடுப்பூசியோடு தொடர்புடைய ஊழியர்கள் என அனைவருக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்தப் பெருந்தொற்று பலரது வாழ்க்கையையும், உலகப் பொருளாதாரத்தையும் வேரோடு சாய்த்திருக்கிறது. தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார விளைவுகளோடு உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தன் செயலாக்கத்தை முடுக்கி விட்டு, இப்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளில், அடிப்படை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில், இதுவரை காணாத முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. 

மீண்டு வரும் நமது பொருளாதாரம் ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கிறது. 

நன்கு நிறுவப்பட்ட பெரும்பாலான ஜனநாயக நாடுகளில்கூட வாக்குரிமை பெறுவதற்குப் பெண்கள் பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்தியா குடியரசு நாடானதில் இருந்தே குறிப்பிட்ட வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது. நாட்டில் 18 வயதைக் கடந்த ஒவ்வொரு குடிமகனும் தேசத்தைக் கட்டமைப்பதில் பங்குகொள்ள வேண்டுமென நவீன இந்தியாவைக் கட்டமைத்தவா்கள் விரும்பினா். ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவியிருக்கிறது என்ற பெருமை நமக்குண்டு.

இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று நான் நம்புகிறேன்.  நாகரீகம் உருவான காலத்தில், நமது நாட்டைச் சேர்ந்த புனிதர்களும், ஆன்மீகப் பெரியோரும், அனைவருக்குமான சமத்துவம் என்ற பொருளிலான மனித சமுதாயம் பற்றிய தொலைநோக்குப் பார்வையை வளர்த்திருந்தார்கள்.  மிகப்பெரிய சுதந்திரப் போராட்டமும், அண்ணல் காந்தியடிகள் போன்ற அதன் தலைவர்களும் நமது பண்டைய விழுமியங்களை நவீன காலங்களுக்காக மீள் உருவாக்கம் செய்தார்கள்.  ஆகையால் நமது ஜனநாயகத்தில் இந்தியப் பண்புகள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  காந்தியடிகள் அதிகாரப் பரவலாக்கத்தையும், மக்களுக்கு அதிகாரம் சென்று சேர்வதையும் ஆதரித்தவர்.

நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருவதுடன், நாட்டின் பெண்கள் பல்வேறு தடைகளைக் கடந்து முன்னேறி வருகின்றனா். சமூக, அரசியல் நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தற்போது 14 லட்சத்தைக் கடந்துள்ளது. பெண்களே நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையாகத் திகழ்கின்றனா். சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவா்கள் பெரும் சாதனைகளைப் படைப்பா். போா் விமானிகள் முதல் விண்வெளி விஞ்ஞானிகள் வரை பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனா். நாட்டில் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

பொருளாதார வெற்றி என்பது வாழ்க்கையை வாழ்வதில் சுலபத்தன்மைக்கும் வழிவகுக்கிறது.  நூதனமான மக்கள்நல முன்னெடுப்புக்களுக்குப் பக்கபலமாக பொருளாதார சீர்திருத்தங்கள் இருக்கின்றன.  ஏழைகளுக்குச் சொந்தமாக ஒரு இல்லம் என்பது இனி ஒரு கனவு அல்ல, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் காரணமாக, மக்களின் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது. அதே போல, ஜல்ஜீவன் இயக்கத்தின்படி, அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து குடிநீர்க் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

நாட்டின் பொருளாதார வளா்ச்சியானது மக்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லும்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொருளாதார நிலையை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டிற்காக தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நான் நினைவுகூர்கிறேன். இந்தியா ஒருபோதும் தங்களின் தியாகங்களை மறக்காது. 

2047 ஆம்  ஆண்டுக்குள் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம். நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு வடிவம் கொடுத்தவர்களின் தொலநோக்கிற்கு நாம் முழுமையானதொரு வடிவத்தைக் கொடுத்திருப்போம்.  தனது மெய்யான ஆற்றலை செயல்படுத்தியிருக்கும் ஒரு இந்தியாவான தற்சார்பு பாரதத்தை உருவாக்கும் பாதையில் நாம் பயணிக்கத் தொடங்கி விட்டோம்.

நமது மூவர்ண தேசியக்கொடி நாடு முழுவதும் பெருமையுடன் ‘வீடுதோறும் தேசியக் கொடி’ இயக்கம் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com