
புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 1,227 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 8 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 14.57 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தொடா்ந்து 12 நாள்களாக 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 1,300-க்கும் கீழ் குறைந்தது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,85,822-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,389-ஆக உயா்ந்தது.
நகரில் ஞாயிற்றுக்கிழமை 2,162 பேருக்கு தொற்று பாதிப்பும், 5 இறப்புகளும், 12.64 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.
நகரில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,421 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.