நாட்டில் ஏழைகளே இல்லாத நிலை சாத்தியமா? அதற்கு ஒரே வழி இதுதான்!

ஒவ்வொரு இந்தியர்களையும் செல்வந்தர்களாக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
நாட்டில் ஏழைகளே இல்லாத நிலை சாத்தியமா? அதற்கு ஒரே வழி இதுதான்!

ஒவ்வொரு இந்தியர்களையும் செல்வந்தர்களாக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

வளமான நாட்டை உருவாக்கும் நோக்கத்தில், 'இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுங்கள்' (மேக் இந்தியா நம்பர் ஒன்) என்ற திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஆக. 17) தொடக்கி வைத்தார். 

தேசிய அளவிலான இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்த அவர், குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கேஜரிவால் பேசியதாவது, உலகின் முதன்மை நாடாக இந்தியாவை மீண்டும் மாற்ற வேண்டும். தலை சிறந்த நாடாக மீண்டும் இந்தியா உருவெடுக்க வேண்டும். அதற்கான தேசிய திட்டத்தை தற்போது தொடக்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் நாட்டின் 130 கோடி குடிமக்களும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தலைசிறந்த நாடாக இருந்தது. நாடு முழுவதுமுள்ள குழந்தைகள் அனைவரும் தரமான மற்றும் இலவச கல்வியைப் பெற வேண்டும். அனைத்து குடிமக்களும் சிறந்த மற்றும் இலவச மருத்துவ சேவையைப் பெற வேண்டும். மிகப்பெரிய போரின் ஆரம்பகட்டமாக இந்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளோம். அதன் அடிப்படையிலேயே இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும். 

எனக்கு ஒரே ஒரு கனவுதான் உள்ளது. உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதுதான் அது. குடிமக்கள் அனைவரும் செல்வந்தர்களானால்தான் இந்தியா செழிப்பான நாடாக மாறும். நாடு செல்வந்த நாடாக இருந்து, குடிமக்கள் ஏழைகளாக இருந்தால் அது நடக்காது. இந்தியாவின் அனைத்து ஏழைகளும் செல்வந்தர்களாக வேண்டும். 

ஏழைகள் எப்படி செல்வந்தர்களாக மாற முடியும். நாம் அது குறித்து யோசிக்க வேண்டும். நாட்டில் விவசாயிகள் மற்றும் தினக்கூலிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் சேர்த்து, அரசு சார்பில் தரமான இலவசக் கல்வியை வழங்கினால், அவர்கள் படித்து மருத்துவர், பொறியாளர் என பல துறைகளில் வல்லுநர்களாவார்கள். அவர்கள் தங்களது குடும்பங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்வார்கள். 

அரசுப் பள்ளிகளில் நாடு முழுவதும் 17 கோடி குழந்தைகள் பயில்கின்றனர். அவர்களுக்கு தரமான இலவசக் கல்வியை கொடுக்க வேண்டும். பல பெற்றோர்களால் தனியார் பள்ளிக் கட்டணத்தை வழங்க இயலாது. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்தி தரமான கல்வியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி மூலம் ஒவ்வொரு இந்தியரும் ஏழ்மையிலிருந்து விடுபடலாம் என முதல்வர் கேஜரிவால் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com