பாஜக ஆட்சிமன்றக் குழுவிலிருந்து கட்கரி, சௌஹான் விடுவிப்பு

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
நிதின் கட்கரி
நிதின் கட்கரி

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 6 பேர் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் கட்டமைப்பில் புதன்கிழமை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி அக்கட்சியின் உயர் அதிகாரக் குழுவான ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கே.லட்சுமண், சுதா யாதவ், சத்தியநாராயண் ஜாட்டியா, முன்னாள் காவல் துறை அதிகாரியான இக்பால் சிங் லால்புரா, சோனோவால் உள்ளிட்ட 6 பேர் புதிதாக இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இக்குழுவின் புதிய உறுப்பினர்களாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ராஜஸ்தான் தலைவர் ஓம் மாத்தூர், பாஜக மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த விஜயா ரஹத்கருக்கு பதிலாக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி மன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கெனவே அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் இயல்பாகவே மத்திய தேர்தல் குழுவிலும் உறுப்பினராக இருப்பது நடைமுறையாகும்.
முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜூவல் ஓராம், ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோர் மத்திய தேர்தல் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்களுக்குப் பிறகு பாஜக ஆட்சிமன்றக் குழுவில் 11 பேரும் மத்திய தேர்தல் குழுவில் 15 தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சிவராஜ் சிங் சௌஹானின் நீக்கத்தைத் தொடர்ந்து பாஜக ஆட்சிமன்றக் குழுவில் தற்போது எந்த மாநில முதல்வரும் இல்லை. இக்குழுவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெறலாம் என்று யூகங்கள் எழுந்தன. மாநிலங்களவையில் அவை முன்னவராக இருக்கும் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் ஆட்சிமன்றக் குழுவில் இடம்பெறலாம் என்று கருதப்பட்டது. பூபேந்தர் யாதவ் தற்போது மத்திய தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
எடியூரப்பாவுக்கு வாய்ப்பு ஏன்? எடியூரப்பாவும், சத்தியநாராயண் ஜாட்டியாவும் 75 வயதைக் கடந்தவர்கள் ஆவர். பாஜகவில் உயர் பதவிகளை வகிப்பதற்கு 75 வயதுக்கு மேல் ஆகியிருக்கக் கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் லிங்காயத்து சமூகத்தின் வாக்கு வங்கி முக்கியமானதாகும். எனவே, லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சிமன்றக் குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடியூரப்பாவுக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்சிமன்றக் குழுவில் எடியூரப்பா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய தேர்தல் குழுவில் பட்னவீஸ் இடம்பெற்றுள்ளது அவரது முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா கடந்த 2020-இல் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு முதல் முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிமன்றக் குழுவில் இருந்த அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மறைந்ததாலும், வெங்கையா நாயுடு, தாவர்சந்த் கெலாட் ஆகியோர் முறையே குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டதாலும் அக்குழு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாகின.
கடந்த 2014-இல் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் ஆட்சிமன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் கட்சியின் வழிகாட்டும் குழுவில் சேர்க்கப்பட்டனர். ஆட்சிமன்றக் குழுவின் புதிய உறுப்பினர்களைப் பொருத்தவரை சுதா யாதவும் லட்சுமணும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவையும், சத்தியநாராயண் ஜாட்டியா தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்களாவர். சோனோவால் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com