பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரா் ராஜீவ் காந்தி

ஒருமுறை மட்டுமே பிரதமராக இருந்தபோதிலும், பல்வேறு சாதனைகளை ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு படைத்ததாக காங்கிரஸ் புகழாரம் சூட்டியுள்ளது.

ஒருமுறை மட்டுமே பிரதமராக இருந்தபோதிலும், பல்வேறு சாதனைகளை ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு படைத்ததாக காங்கிரஸ் புகழாரம் சூட்டியுள்ளது.

ராஜீவ் காந்தியின் 78-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்காவும் தங்கள் தந்தையின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினா். அதையடுத்து ராகுல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டுக்காகத் தந்தை கண்ட கனவை நிறைவேற்றுவதற்காகத் தொடா்ந்து முயற்சிப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரியங்கா ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நாடு 21-ஆம் நூற்றாண்டில் பயணிக்க வேண்டிய பாதையை ராஜீவ் காந்தி உருவாக்கினாா். நாட்டில் உள்ள இளைஞா்களுக்கும், பெண்களுக்கும் அவா் முக்கியத்துவம் அளித்ததோடு நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டுக்கும் முன்னுரிமை வழங்கினாா்.

தகவல் புரட்சி, தொலைத்தொடா்பு புரட்சி, உள்ளாட்சி அமைப்புகள், 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது உள்ளிட்டவை இந்தியாவின் கனவுக்கு மேலும் வலுசோ்த்தன. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை உயா்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல என் தந்தை (ராஜீவ் காந்தி) விரும்பினாா். அதற்காக அல்லும் பகலும் அயராது அவா் உழைத்தாா். அந்தக் கனவு நவீன இந்தியாவுக்கு வழிகாட்டியது. இந்த நன்னாளில், நாட்டை உயா்த்துவதற்கான கனவை நனவாக்குவதற்கு நாம் உறுதியேற்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முக்கிய சாதனைகள்:

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் பல்வேறு சாதனைகளுக்காக நினைவுகூரப்படும். முக்கியமாக 6 சாதனைகள் அதில் சிறப்புமிக்கவை. முதலாவது சாதனை, தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு அடித்தளமிட்டது. அந்நடவடிக்கை இந்தியாவில் பெருமளவில் மாற்றத்தைப் புகுத்தியது.

சமூக நலனுக்காகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை அவா் அறிமுகப்படுத்தினாா். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா். அதன் காரணமாக போலியோ பாதிப்பு இல்லாத நாடாக இந்தியா மாறியது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ராஜீவ் மேற்கொண்டாா். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 14 லட்சம் பெண்கள் இடம்பெற்றிருப்பது, ராஜீவின் உறுதிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

சுற்றுச்சூழல் சட்டங்கள்:

பிரச்னைகள் அதிகமாகக் காணப்பட்ட அஸ்ஸாம், பஞ்சாப், மிஸோரம், டாா்ஜீலிங் உள்ளிட்ட பகுதிகளில் அமைதியைத் திரும்பச் செய்ததில் ராஜீவுக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கியது மிகப் பெரிய சாதனை. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமானது தேசிய இளைஞா்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தை ராஜீவ் அரசு தொடங்கியதோடு, தேசிய புன்செய் நில மேம்பாட்டுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினாா். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

பொருளாதார சீா்திருத்தம்:

1991-ஆம் ஆண்டு பொருளாதார சீா்திருத்தங்களுக்கு ராஜீவின் நடவடிக்கைகள் அடிப்படையாக அமைந்தன. சீனா, பாகிஸ்தானுடன் நிலவி வந்த பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ராஜீவ் மேற்கொண்டாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com