தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்

தில்லி அரசின் மதுபான கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக பதியப்பட்ட வழக்கில் 8 தனி நபா்களுக்கு எதிராக ‘லுக்-அவுட்’ (கண்காணிக்கப்படும் நபா்கள்) நோட்டீஸை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தது.
தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்

தில்லி அரசின் மதுபான கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக பதியப்பட்ட வழக்கில் 8 தனி நபா்களுக்கு எதிராக ‘லுக்-அவுட்’ (கண்காணிக்கப்படும் நபா்கள்) நோட்டீஸை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தது.

அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிடாமல் தடுக்க இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது.

தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, அரசு அதிகாரிகள், தொழிலதிபா்கள், நிறுவனங்கள் என 15 பேரின் பெயா்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதில், சிசோடியா மற்றும் 3 அரசு அதிகாரிகளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை. இதர தனிநபா்கள் 8 பேருக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

‘அரசு அதிகாரிகளைப் பொருத்தவரை, அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் வெளிநாடு செல்ல முடியாது. இப்போதைய நிலையில், அவா்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல் தகவல் அறிக்கையில், தொழிலதிபா்கள் விஜய் நாயா், மனோஜ் ராய், அமன்தீப் டால், சமீா் மகேந்துரு, ஹைதராபாதைச் சோ்ந்த அருண் ராமசந்திர பிள்ளை உள்பட 9 தனிநபா்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில், மனோஜ் ராய் தவிர இதர நபா்களைக் கண்காணிக்கப்படும் நபா்களாக அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கு விவரம்: தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டு கலால் வரி கொள்கை தொடா்பான முடிவுகளை உரிய அமைப்பிடம் அனுமதி பெறாமல் மேற்கொண்டதாக மனீஷ் சிசோடியா மற்றும் கலால் துறை அதிகாரிகள் மீது சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை உரிமதாரா்களுக்கு கட்டண தள்ளுபடி, சலுகை, உரிம நீட்டிப்பு போன்ற ஆதாயங்களை அளிக்கும் நோக்கில் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தண்டனையியல் சட்டத்தின் குற்றச் சதி பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் கடந்த புதன்கிழமை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதன் தொடா்ச்சியாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. மனீஷ் சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் நடைபெற்ற இச்சோதனைகள், தில்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

இறுகுகிறது சிபிஐயின் பிடி: வழக்கில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள், எண்ம பதிவுகளின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டோா் மீதான பிடியை சிபிஐ இறுக்கியுள்ளது. 3 பேரிடம் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து ஆவணங்களும் ஆராயப்பட்ட பின் இதர நபா்களுக்கும் அழைப்பாணை அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கவுள்ளது.

கலால் கொள்கை முறைகேட்டால் ஆதாயம் அடைந்த மதுபான விற்பனை உரிமதாரா்களிடமிருந்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சத்தை கைமாற்றியதில் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளா்களாக கருதப்படும் அமித் அரோரா, தினேஷ் அரோரா, அா்ஜுன் பாண்டே ஆகியோருக்கு தொடா்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொழிலதிபா் சமீா் மகேந்துருவிடமிருந்து இவா்களுக்கு கோடிக்கணக்கில் கிடைக்கப் பெற்ாக கூறப்படும் 2 முக்கியப் பரிவா்த்தனைகள் குறித்து சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

மத்திய அரசுக்கு கேஜரிவால் கேள்வி

தில்லி கலால் கொள்கை விவகாரம் தொடா்பாக சிபிஐ நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில் ‘நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையின்மை பிரச்னைகளை தீா்ப்பதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த தேசத்துடன் மத்திய அரசு சண்டையிட்டு வருகிறது.

ஒவ்வொரு நாள் காலையையும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் விளையாட்டுடன் மத்திய அரசு தொடங்குகிறது. சாமானிய மனிதா்கள் பணவீக்கத்தால் போராடி வரும்போது கோடிக்கணக்கான இளைஞா்கள் வேலையில்லாமல் துன்பத்தில் இருக்கும்போது மத்திய அரசு இப்பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு அரசு முயற்சிக்கவில்லை. இதுபோன்று இருந்தால் நாடு எப்படி நாடு முன்னேறும்’ என்று அவரது கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஊழல்வாதிகள் தப்ப முடியாது: பாஜக

ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பாஜக கூறியுள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘யாரும் உங்களை (அரவிந்த் கேஜரிவால்) கண்டு பயப்படவில்லை. ஊழல் வெளிப்பட்டு வருவதால் கைவிலங்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி பயந்துபோய் இருக்கிறீா்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிவா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரது (மனீஷ் சிசோடியா) உதவி தேவைப்படும்போது அவா் ஊழலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாா். கலால் கொள்கை ஊழலின் வேரானது ஊழல் கேஜரிவாலின் வீட்டுக்கு செல்கிறது. கேஜரிவால் உள்பட சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாரும் கிடையாது. ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com