/

17 வயது சிறுமியை கடத்திய கும்பல்: போக்குவரத்து நெரிசலால் மீட்ட காவல் துறை

உத்தரப் பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கடத்திய கும்பலை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலில் சாதூர்யமாக செயல்பட்டுப் பிடித்தனர்

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 3:41 pm IST


உத்தரப் பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கடத்திய கும்பலை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலில் சாதூர்யமாக செயல்பட்டுப் பிடித்தனர். 

காரில் இருந்த சிறுமி காவல் துறையினரின் வாகனம் கடந்து செல்லும்போது சத்தமிட்டு கத்தியதால், சந்தேகமடைந்த காவலர்கள் காரை பின்தொடர்ந்து வந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள அருகேவுள்ள குஷிநகரில் 17 வயது சிறுமியை மர்ம கும்பல் கடத்திச்செல்ல முயன்றனர். சிறுமியின் மாமா இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 

சொகுசுக் காரில் சிறுமியை கடத்திச் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் காவல் துறையினரைக் கண்டு சிறுமி தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு போக்குவரத்து காவலர் தகவல் தந்துள்ளார். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பெண் உள்பட காரில் இருந்த 4 பேரை கைது செய்து சிறுமியை மீட்டனர். 

இது தொடர்பாக பேசிய துணை ஆய்வாளர் சத்யேந்திர சிங், காவல் துறையின் ஒரு அணியினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீடீரென அழுகையுடன் உதவி கேட்கும் பெண் குரல் ஒலித்தது. இதனால் உடனடியாக சத்தம் வந்த காரை சூழ்ந்துகொண்டோம். உள்ளே அழுதபடி இருந்த சிறுமியை வெளியே அழைத்தபோது, அவர் தன்னை காரில் இருப்பவர்கள் கடத்திச்செல்வதாகக் கூறினார். தனது விருப்பத்திற்கு மாறாக மாமாவின் உதவியுடன் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெண் உள்பட காரில் இருந்த 4 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.