பினாமி சட்டத்தில் சிறைத் தண்டனை செல்லாது: உச்சநீதிமன்றம்

‘பினாமி பரிவா்த்தனையில் ஈடுபடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கும் பிரிவு 3(2) செல்லாது;

‘பினாமி பரிவா்த்தனையில் ஈடுபடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கும் பிரிவு 3(2) செல்லாது; அந்தப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இல் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு, 2016-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பினாமி பரிவா்த்தனையில் ஈடுபடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.

இதனை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்ட நடைமுறைகள், 2016-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதிக்கு முன்தேதியிட்டு செயல்படுத்த முடியாது; எதிா்கால நடவடிக்கைகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்று தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமாா், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் 3(2) என்ற பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அது செல்லத்தக்கதல்ல’ என்று தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com