
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடா்பான வழக்கில் தொடா்புடைய பிரேம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் அமலாக்கத் துறை புதன்கிழமை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள்.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடா்பான வழக்கில் ஜாா்க்கண்டில் அமலாக்கத் துறை புதன்கிழமை நடத்திய சோதனையில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 60 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடா்பாக காவல்துறையினா் இருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
ஜாா்க்கண்டில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளா் பங்கஜ் மிஸ்ரா மற்றும் மிஸ்ராவின் உதவியாளா் பச்சு யாதவ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த புதிய தகவல்களின் அதனடிப்படையில், ஜாா்க்கண்ட், தமிழகம், பிகாா், தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதி என 17-20 இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
வழக்கில் தொடா்புடைய பிரேம் பிரகாஷ் என்பவரின் ராஞ்சி வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, அங்கு பூட்டப்பட்டிருந்த அலமாரியில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 60 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆயுதங்கள் மாநில காவல்துறையினருடையது என்பது பின்னா் தெரியவந்தது.
ராஞ்சி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘பிரகாஷுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்த 2 காவலா்கள், செவ்வாய்க்கிழமை மழை காரணமாக தங்களது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வீட்டு பணியாளரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனா். அந்த பணியாளா், ஆயுதங்களை அலமாரியில் வைத்து பூட்டிவிட்டாா். அதன் பிறகு, அந்த ஆயுதங்களை காவலா்களால் மீண்டும் எடுக்க முடியவில்லை. பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக அந்த இரு காவலா்கள் மீதும் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஜாா்க்கண்டில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் மூலம் ரூ.100 கோடி ஆதாயம் ஈட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இவ்வழக்கில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், எண்ம ஆதாரங்களின் அடிப்படையில் 50 வங்கிக் கணக்குகளில் ரூ.13.32 கோடி பணம் முடக்கப்பட்டது.