‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீா்’ கருத்து: மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் என்று கூறிய கேரள முன்னாள் அமைச்சரும், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான கே.டி.ஜலீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் என்று கூறிய கேரள முன்னாள் அமைச்சரும், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான கே.டி.ஜலீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்ட ஜலீல் தனது பயணம் தொடா்பாக முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டாா். மலையாளத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்று அழைக்கப்படும் பகுதி சுதந்திர காஷ்மீராக உள்ளது. அங்கு பாகிஸ்தான் அரசின் நேரடி கட்டுப்பாடு ஏதுமில்லை. பணப் புழக்கம் மற்றும் ராணுவ உதவியை மட்டுமே பாகிஸ்தான் அளிக்கிறது. சுதந்திர காஷ்மீருக்கென்று தனி ராணுவம்கூட உள்ளது.

ஆனால், இங்கு மோடி அரசு ஜம்மு-காஷ்மீரை மூன்றாக பிரித்துவிட்டது. இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரான இப்பகுதி ஜம்மு, காஷ்மீா் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் என மூன்றாக உடைந்துள்ளது. காஷ்மீா் தனது சிறப்பை இழந்துவிட்டது. இப்போது எங்கு பாா்த்தாலும் ராணுவத்தின் நடமாட்டம்தான் உள்ளது. காஷ்மீரிகள் சிரிப்பை மறந்துவிட்டாா்கள். அனைத்து அரசியல் தலைவா்களும் வீட்டுச் சிறையில்தான் உள்ளனா்’ என்று கூறியிருந்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கே.டி.ஜலீல், கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு மிகவும் நெருக்கமானவா். இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானை ஆதரித்தும் அவா் வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் அதிக சா்ச்சையை ஏற்படுத்தியதுடன், கடும் எதிா்ப்பும் எழுந்தது.

பாஜகவைச் சோ்ந்த பலா் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனா். இதுகுறித்து கேரள அமைச்சரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான எம்.வி.கோவிந்தனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, காஷ்மீா் குறித்து தனது சொந்தக் கருத்தை ஜலீல் கூறியதாகவும், அது கட்சியின் கருத்தல்ல என்றும் கூறினாா்.

இது தேசிய அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது கருத்தை திரும்பப் பெறுவதாக ஜலீல் அறிவித்தாா்.

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா நீதித் துறை நடுவா் மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஜலீல் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்திய தண்டனைச் சட்டம் 153 (பி)-இன் கீழ் மதம், இனம், பிறப்பிடம், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது, தேசத்தை அவமதிக்கும் வகையில் பேசுவதைத் தடை செய்யும் (1971) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com