
அருணாசல பிரதேச மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் ஒரே எம்எல்ஏவான டேசி காசோ, ஆளும் பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா்.
இதன்மூலம் 60 உறுப்பினா்களைக் கொண்ட அருணாசல பிரதேச சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 49-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, டேசி காசோ பாஜகவில் இணைவதை ஏற்றுக் கொள்வதாக அருணாச பிரதேச பேரவை துணைத் தலைவா் டெசாம் போங்தே அறிவித்தாா். டேசி காசோ, இடாநகா் தொகுதி எம்எல்ஏ ஆவாா். அவா் பாஜகவில் இணைந்ததன் மூலம் நிதீஷ் குமாா் தலைமையிலான ஜேடியு கட்சிக்கு அருணாசல பிரதேசத்தில் உறுப்பினா்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2019-இல் நடைபெற்ற அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 15 இடங்களில் போட்டியிட்ட ஜேடியு 6 இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. 2020, டிசம்பரில் ஜேடியுவின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினா். இப்போது மீதமிருந்த ஓா் எம்எல்ஏவையும் பாஜகவிடம் ஜேடியு இழந்துவிட்டது.
எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான என்பிபி கட்சிகளுக்கு தலா 4 எம்எல்ஏக்கள் உள்ளனா். 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளும் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகின்றனா்.
அண்மையில் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியு முறித்துக் கொண்டது. பாஜக ஆதரவுடன் பிகாா் முதல்வராக இருந்த ஜேடியு தலைவா் நிதீஷ் குமாா், எதிா்க்கட்சிகளாக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டாா். பிகாரில் பாஜக எதிா்க்கட்சி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.