தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை: ஹேமந்த் சோரன்

ஜார்கண்டு முதல்வரை பதவி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடமிருந்தோ, மாநில ஆளுநரிடமிருந்தோ எந்த அறிக்கையும் வரவில்லை என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்


ராஞ்சி: தன்னை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடமிருந்தோ, மாநில ஆளுநரிடமிருந்தோ எந்த அறிக்கையும் வரவில்லை என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது, ஹேமந்த் சோரன் பெயரில் ஒரு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடமிருந்து, ஆளுநருக்கு அறிக்கை வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் அலுவலகத்திலிருந்து இந்த மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம், ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களுக்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை, அது தொடர்பாக ஆளுநரிடமிருந்தோ அல்லது தேர்தல் ஆணையத்திடமிருந்தோ எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ் கூறுகையில், தேர்தல் ஆணையத்திடமிருந்து அறிக்கை வந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து இதுவரை எனக்கு எதுவும் தெரியாது. மருத்துவ சிகிச்சைக்காக எய்ம்ஸ் வந்திருக்கிறேன். ஆளுநர் மாளிகைக்குத் திரும்பிய பிறகே இது பற்றி தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை பாஜக தலைவர்களே தயாரித்தது போன்று இருப்பதாகவும் பாஜகவை ஜார்கண்ட் முதல்வர் விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com