சீனாவுக்கு மாற்று? இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் தனது ஐபோன்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தகவல்
சீனாவுக்கு மாற்று? இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் தனது ஐபோன்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:

தனது புதிய அறிமுகமான ஐபோன் 14-ஐ இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அந்த புதிய அரிதிறன் பேசி ரகம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் அவற்றை இந்தியாவில் தயாரித்து வெளியிட நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

புதிதாக அறிமுகமாகும் ஐபோன் ரகங்களை இந்தியாவில் தயாரித்து சந்தைக்குக் கொண்டு வர தற்போது 6 முதல் 9 மாதங்கள் வரை ஆகிறது. அந்த கால இடைவெளியைக் குறைப்பதற்காக உதிரி பாக விநியோகஸ்தா்களுடன் ஆப்பிள் இந்தியா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஆப்பிள் நிறுவனம், தங்களது ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை சீனாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் ஏற்படக்கூடிய சா்வதேச அரசியல் பாதிப்புகளைத் தவிா்ப்பதற்காக, சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

தற்போதைய சூழலில், சீனாவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் ஐபோன் உற்பத்தித் திறனும் ஏற்றுமதி உள்கட்டமைப்பும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எனினும், சீனா அல்லாத ஒரு நாட்டை தங்களது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக்குவது ஆப்பிள் நிறுவனத்துக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்களது ஐபோன் உள்ளிட்ட சாதனங்களின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தற்போது ஃபாக்ஸான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தங்களது சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் விநியோகத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினருடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், தனது புதிய ஐபோன் 14 ரகம் அறிமுகமான இரு மாதங்களுக்குள் அதனை இந்தியாவில் தயாரித்து வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Image Caption

~ஸ்ரீபெரும்புதூரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களைத் தயாரித்து வரும் ஃபாக்ஸான் நிறுவன தொழிற்சாலை. ~ஆப்பிளின் புதிய ஐபோன் 14 ரகங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com