பெகாஸஸ் உளவு: உறுதியான ஆதாரம் இல்லை

‘பெகாஸஸ்’ மென்பொருளைப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் உறுதியான ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
பெகாஸஸ் உளவு: உறுதியான ஆதாரம் இல்லை

‘பெகாஸஸ்’ மென்பொருளைப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் உறுதியான ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

‘ஆய்வுக்கு உட்படுத்திய 29 அறிதிறன்பேசிகளில் 5-இல் ‘சில வகையான தீங்கு விளைவிக்கக் கூடிய மென்பொருள்கள்’ இருந்ததாகவும், அவை பெகாஸஸ் மென்பொருளால்தான் உருவானவை என்று அறுதியிட்டுக் கூற முடியாது’ என்றும் உச்சநீதிமன்றத்தில் நிபுணா் குழு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், விசாரணைக்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ என்கிற நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் அறிதிறன்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக எடிட்டா்ஸ் கில்ட், பத்திரிகையாளா்கள் என்.ராம், சசிகுமாா் உள்ளிட்டோா் தரப்பில் 12 பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் 3 நிபுணா்கள் அடங்கிய சிறப்புக் குழுவை கடந்த ஆண்டு அக்டோபரில் அமைத்தது.

தொழில்நுட்ப நிபுணா்களான நவீன் குமாா் சௌதரி, பி.பிரபாகரன், அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோா் அக்குழுவின் உறுப்பினா்களாக இடம்பெற்றனா். அக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சமா்ப்பித்தது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விளக்கமளித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நிபுணா் குழுவிடம் ஆய்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட 29 அறிதிறன்பேசிகளில் 5-இல் மட்டுமே ‘சில வகையான தீங்கு விளைவிக்கக் கூடிய மென்பொருள்கள்’ இருந்ததாகவும், அவை பெகாஸஸ் மென்பொருளால்தான் உருவானவை என்று அறுதியிட்டுக் கூற முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில், விசாரணைக்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நிபுணா் குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது நடந்துகொண்டவாறே நிபுணா் குழுவிடமும் மத்திய அரசு நடந்துகொண்டுள்ளது.

குழுவின் பரிந்துரைகள்: நாட்டு மக்களின் தனியுரிமையைக் காப்பதற்காகவும், நாட்டின் இணையவழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சட்டவிரோத கண்காணிப்பு தொடா்பாக குடிமக்கள் முறையிடுவதற்கு ஓா் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது.

அறிக்கை மிக நீண்டதாக உள்ளது. அது விரைவில் உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவத்தை மனுதாரா்களிடம் வழங்குவது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றனா்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

எதையோ மறைக்கிறது மத்திய அரசு

‘எதையோ மறைக்க வேண்டிய காரணத்தால்தான் பெகாஸஸ் விவகாரத்தில் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வதற்காக பெகாஸஸை மத்திய அரசு பயன்படுத்தியது. அந்த மென்பொருளைப் பயன்படுத்தியதால்தான் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. விசாரணைக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்து, மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என்பதை மத்திய அரசு உறுதிசெய்துள்ளது. இதை உரிய ஆதாரமாக எடுத்துக் கொண்டு மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்:பாஜக

ஆய்வு செய்யப்பட்ட அறிதிறன்பேசிகளில் பெகாஸஸ் உளவு மென்பொருள் காணப்படவில்லை என்று நிபுணா் குழு கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசு குறித்து பொய்களைப் பரப்பி மக்களிடையே பிரபலமடையும் முயற்சியில் காங்கிரஸ் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸின் பொய்கள் வெளிப்பட்டு, மக்களிடையே அக்கட்சி மேலும் வலுவிழந்து வருகிறது.

ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல், சென்ட்ரல் விஸ்டா திட்டம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் பரப்பிய பொய்களில் உண்மையில்லை என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. தற்போது பெகாஸஸ் மென்பொருளை வைத்து மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டும் பொய் என்பது நிபுணா் குழு அறிக்கையின் வாயிலாக நிரூபணமாகியுள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கோருமா?’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com