சீனாவில் இருந்து தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? - அப்பாவு கேள்வி

சீனாவில் இருந்து பாலியஸ்டராலான இந்திய தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன வேண்டியிருந்தது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். 
சீனாவில் இருந்து தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? - அப்பாவு கேள்வி


சீனாவில் இருந்து பாலியஸ்டராலான இந்திய தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன வேண்டியிருந்தது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். 

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65 ஆவது சட்டப்பேரவைத் தலைவர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் மாநிலங்களின் பேரவைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் கலந்துகொண்டனர் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்குள் பேரவைத் தலைவர்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்திப் பேரணியாக வந்தனர். இந்தியா சார்பில் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டவை (மேட் இன் சீனா) என்ற வாசகம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு பல தரப்பினரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தேசியக் கொடியில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததால் எழுந்த சர்ச்சை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அளித்த பேட்டியில், சீனாவில் இருந்து தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன வேண்டியிருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அதாவது, காமன்வெல்த் மாநாட்டில் பேரணியாக தேசியக் கொடிகளை கைகளில் ஏந்திச் சென்றோம். அந்த கொடிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது குறித்து மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டார். இது எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. 

மேலும், சீனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன வேண்டி இருந்தது. 

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில்  சொன்னால் 100 கோடி தேசியக் கொடிகளை ஒரே நாளில் தருவார்கள். இந்த நிலை இந்தியாவுக்கு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. 

மேலும், வெளிநாடுகளில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. சட்டத்தை மீறி இறக்குமதி செய்யவில்லை. மத்திய அரசு அனுமதியோடு தான் இது நடந்திருக்கிறது. காமன்வெல்த் மாநாடு போன்ற இடங்களில், இந்திய தேசியக் கொடியில் இப்படி இடம்பெறுவது சரிதானா? என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். 

‘உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து காதி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிவரும் பிரதமா் மோடி, சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டராலான இந்திய தேசியக் கொடிகளை பெருமளவில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்ததின் உள்நோக்கம் என்ன?, இதனால் தேசியக் கொடிகளைத் தயாரித்து வரும் ஆயிரக்கணக்கான காதித் தொழிலாளா்கள் பணி இழப்பாா்கள். பாலிஸ்டா் தேசியக் கொடிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் காதி அமைப்பு அழிந்துவிடும். மகாத்மா காந்தியின் மரபும் மறைந்துவிடும். எனவே, இந்திய தேசியக் கொடி இறக்குமதி செய்ய மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது கூறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com