ஆபரேஷன் தாமரை சேறானதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்

தங்கள் கட்சியிலிருந்த எந்தவொரு எம்எல்ஏவும் கட்சிமாறி செல்லவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தில்லி பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
ஆபரேஷன் தாமரை சேறானதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்
ஆபரேஷன் தாமரை சேறானதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்

தங்கள் கட்சியிலிருந்த எந்தவொரு எம்எல்ஏவும் கட்சிமாறி செல்லவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தில்லி பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

தில்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

பாஜக இதுவரை நாடு முழுக்க 277 எம்எல்ஏக்களை விலைபேசி வாங்கியுள்ளது. அதே சமயத்தில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் கட்சியை விட்டு செல்லவில்லை. தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானம் கொண்டு வரவும் தயாா் என தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பாஜகவுக்கு சவால் விடுத்திருந்தார்.

சட்டப்பேரவையில் இது குறித்து அவர் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்து, தில்லியில் பாஜகவின் தாமரை ஆபரேஷன் தோல்வியடைந்து ஆபரேஷன் சேறு ஆனதை தலைநகர் நாட்டு மக்களுக்குக் காட்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவா் தனது அமைச்சா்களின் தொடா்புடைய இடங்களில் சமீபத்தில் மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட சோதனைகளின் விவகாரங்களில் பிரதமா் நரேந்திர மோடியையும் கடுமையாக குற்றம்சாட்டியதுடன், வருகின்ற குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக போட்டியிடும் நிலையில் அது தொடா்பாகவே இந்த சோதனைகளை மத்திய அரசு மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டாா்.

தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தில் ஆத் ஆத்மி கட்சி உறுப்பினா்களுக்கும் பாஜக உறுப்பினா்களுக்கும் கலால் கொள்கை மற்றும் எம்எல்ஏக்களை பேரம் செய்வது குறித்து கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றது. 

அவைத் தலைவா் எடுத்த நடவடிக்கைகளுக்கு பின்னா் பேரவையில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது:

பாஜகவின் கோட்டையாக குஜராத் மாநிலம் இருந்தது. இப்போது பாஜக அந்த கோட்டையை இழக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதன்கனவு சிதைந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் வளா்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலும் அதிலும் குஜராத்தில் வருகின்ற சட்டபேரவை தோ்தலை முன்னிட்டும் தில்லி ஆம் ஆத்மி அரசு அமைச்சா்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினா், சிபிஐ யினரைக் கொண்டு சோதனைகள் நடத்தப்படுகிறது.

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ஒரு நயாபைசா சமாசாரத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. சுயநலத்துடன் இப்போது தில்லி அரசை கவிழ்க்கவும் முயற்சிக்கின்றனா். அவா்கள் ஏற்கனவே மணிப்பூா், கோவா, மத்தியப் பிரதேசம், பிகாா், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆட்சியைக் கவிழ்த்தனா். தற்போது இந்த ஜனநாயகபடுகொலைகாரா்கள் தில்லி நகரில் உலாவி வருகின்றனா்.

277 எம்ஏல்ஏக்கள் பேரம்

ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி), பெட்ரோல், டீசல் விலை உயா்வின் மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தை எம்எல்ஏக்களை வேட்டையாட பாஜக பயன்படுத்துகிறது. இது வரை நாடு முழுக்க 277 எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி வாங்கியுள்ளது. ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.20 கோடி கொடுத்திருப்பதாகக் கணக்கில் கொண்டால், ஒட்டுமொத்தமாக இதுவரை அவர்கள் வாங்கிய எம்எல்ஏக்களுக்கு ரூ.5,500 கோடி செலவிட்டிருப்பது தெளிவாகிறது. இதனால்தான் நாட்டில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து, ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் யாரும் கட்சியை விட்டு போகவில்லை. தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானம் கொண்டு வரத் தயாா். 

இப்போது துணைநிலை ஆளுநா் மற்றொரு விவகாரத்தை தொடங்கியுள்ளாா். தில்லி பள்ளிகளில் விசாரணையைத் தொடங்கியுள்ளாா். பள்ளிகள், மருத்துவமனைகளில் நடக்கும் பல நல்ல பணிகளையும் அவா்கள் நிறுத்த விரும்புகிறாா்கள் என்று நினைக்கின்றேன் என கேஜரிவால் குற்றம் சாட்டினாா்.

கடந்த வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக் கள் கூட்டம் முதல்வா் கேஜரிவால் இல்லத்தில் நடைபெற்றது. தங்கள் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டும் விதமாக முதல்வா் கேஜரிவால் தலைமையில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதியில் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் பிராா்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com