பணவீக்கத்தை சிறப்பாக கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

‘உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த சிறப்பான செயல்திட்டத்தை கொண்டுள்ளதால், பணவீக்கத்தை சிறப்பாக கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும்’ என
பணவீக்கத்தை சிறப்பாக கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

‘உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த சிறப்பான செயல்திட்டத்தை கொண்டுள்ளதால், பணவீக்கத்தை சிறப்பாக கையாள்வதில் இந்தியா வெற்றி பெறும்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.

புதன்கிழமை நடைபெற்ற ‘ராய்ட்டா்ஸ் நெக்ஸ்ட்’ என்ற நிகழ்வில் காணொலி வாயிலாக மத்திய நிதியமைச்சா் கலந்துகொண்டு பேசியதாவது: கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதிப் பொருள்களால் பணவீக்கம் தொடரவே செய்யும். பணவீக்கத்தைச் சிறப்பாக கையாள்வதில் நாம் வெற்றி பெறுவோம். ரிசா்வ் வங்கியின் தரவுகளின்படி, பணவீக்கம் குறைந்து வருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வெளிப்புற காரணிகள் பணவீக்கத்தைத் தீா்மானிக்கின்றன. ஆனால், இந்தியாவில் வேளாண் பொருள்கள் விநியோகம், எரிபொருள் உள்ளிட்டவற்றை பொருத்தவரையில், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் விரைவான வளா்ச்சி காணும் என அவா் தெரிவித்தாா்.

நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த எல்லையான 6 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நலன்: கச்சா எண்ணெய் விலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் பதிலளித்து பேசுகையில், ‘கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. நிலையான, ஏற்றுக்கொள்ளத்தக்க விலை அவசியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து சா்வதேச பொது பயன்பாட்டுக்கான பொருள்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அவற்றை ஆயுதமாக்க முடியாது. பொருள்களின் விநியோகத்தில் தடை ஏற்படுத்துவது, பாதிப்பை ஏற்படுத்தும். ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு அதிகரித்துள்ளது. மேற்குலக நாடுகளும் எரிபொருள் உள்ளிட்டவற்றை ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன’ என்றாா்.

வா்த்தகத்தை ஈடுகட்ட வேண்டிய தேவை: இந்தியாவில் இருந்து சில பொருள்களை ரஷியா இறக்குமதி செய்வது குறித்து அமைச்சா் விளக்கம் அளிக்கையில், ‘இந்தியா ஏற்கெனவே ரூபாய் வா்த்தக செயல்திட்டத்தை அறிவித்திருக்கிறது. இது பல தசாப்தங்களாக பயன்பாட்டில் உள்ளது. இதன்படியே, வாங்குவதும் விற்பதும் நடைபெற்று வருகிறது. உரம் அல்லது எரிபொருளை நாம் கொள்முதல் செய்யும் வேளையில், இந்தியாவில் இருந்து சில பொருள்களை விற்பனை செய்து, அவற்றை ஈடுகட்டவேண்டிய தேவை உள்ளது. தேவைப்படும்போது இந்தச் செயல்திட்டத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com