ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வு முன் தமிழக அரசு தரப்பில் தொடர் வாதம் முன்வைப்பு
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு முன் புதன்கிழமை தமிழக அரசின் தரப்பில் தொடர் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் த்விவேதி வாதிடுகையில், "ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு தன்மையைக் கொண்டிருப்பதால், இது கலாசார மதிப்பீடுகளைக் கொண்டிருக்க முடியாது என்று கூறுவது தவறான கருத்தாகும்' என்று கூறினார்.
மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், தமிழக அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிலையில், அரசியல் சாசன அமர்வு முன் புதன்கிழமை இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகியும், வழக்கில் தொடர்புடைய பிறர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்களும் வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது, ஜல்லிக்கட்டு நிகழ்வில் மனித உயிர்கள் பலி மற்றும் காயமடைவது குறித்து மனுதாரர்களில் ஒருவரின் வழக்குரைஞர் முன்வைத்த வாதத்தை நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. அதற்கு முகுல் ரோத்தகி பதில் அளிக்கையில், "ஒவ்வொரு செயல்பாட்டு தளத்திலும் பொதுமக்கள் உயிரை இழக்கும் நிகழ்வுகள் உள்ளன' என எடுத்துக்காட்டுடன் வாதிட்டார்.
விசாரணையின் போது சில மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும், மனிதர்கள் பலர் உயிரிழந்தது தொடர்பாகவும் வெளியான ஊடகச் செய்திகளையும், புகைப்படங்களையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "ஜல்லிக்கட்டின் போது காளைகளுக்கு துன்புறுத்தல் இழைப்பதைக் காட்டும் வகையில் சில மனுதாரர்களால் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அடிப்படையில் நாங்கள் ஒரு தோற்றத்தை உருவாக்கினால், அது எங்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக இருக்கும்" என்று குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (டிசம்பர் 8) ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.