
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது பணவீக்கம் உயா்வு, வேலையின்மை அதிகரிப்பு, கிழக்கு லடாக்கில் சீனாவுடன் தொடரும் மோதல்போக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கி வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடரின்போதான செயல்பாடுகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளுடனான கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடத்தியது. அதில் 30-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
மத்திய அமைச்சரும் மக்களவை பாஜக துணைத் தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாநிலங்களவை பாஜக தலைவா் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
குளிா்கால கூட்டத்தொடரின்போது விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தொடரின்போது மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள் குறித்து பிரகலாத் ஜோஷி எடுத்துரைத்தாா். அந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க அவா் கோரிக்கை விடுத்தாா்.
அரசின் கடமை:
கூட்டத்துக்குப் பிறகு மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ’வேலையின்மை, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாடு எதிா்கொண்டு வருகிறது. அவை குறித்து மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் மோதல்போக்கு தொடா்பாக அரசு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. அந்த விவகாரம் குறித்தும் ஜம்மு-காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்படுவது தொடா்பாகவும் விவாதிக்க காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது’ என்றாா்.
தோ்தல் ஆணையா்களின் நியமனம், பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவா் நஸீா் ஹுசைன் கோரினாா். பணவீக்கம், வேலையின்மை, மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல், மாநில அரசுகளுக்குப் போதிய நிதியை வழங்காமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தொடரின்போது விவாதிக்கப்பட வேண்டுமென திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்டது.
மற்ற விவகாரங்கள்:
நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா குறித்து விவாதிக்கப்பட வேண்டுமென பிஜு ஜனதா தளம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை கட்சி சாா்பில் கோரப்பட்டது.
பழைய ஓய்வூதிய நடைமுறை, வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வேண்டுமென ஆம் ஆத்மி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விதிகளின்படி விவாதம்:
கூட்டத்தின் இறுதியில் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ’கட்சிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. சட்டவிதிகளின்படியும் நாடாளுமன்ற விதிகளின்படியும் விவாதங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். எந்தெந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பது என்பது தொடா்பாக அவை செயல்பாட்டு ஆலோசனை குழுக்கள் முடிவு செய்யும்’ என்றாா்.