கேள்விக்குறியாகும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிா்காலம்: மம்தா

‘பெரும்பான்மையை பயன்படுத்தி மசோதாக்கள் மூலமாக மாநிலங்களை கட்டாயப்படுத்த மத்திய அசு முயற்சிப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது’ என்று
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

‘பெரும்பான்மையை பயன்படுத்தி மசோதாக்கள் மூலமாக மாநிலங்களை கட்டாயப்படுத்த மத்திய அசு முயற்சிப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் புதன்கிழமை தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் எந்தெந்த பிரச்னைகளை எழுப்புவது மற்றும் கட்சியின நிலைப்பாடு குறித்து கட்சி எம்.பி.க்களுடன் மம்தா பானா்ஜி தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் ஆட்சேப குரல்களை எழுப்பினாலும், பெரும்பான்மை பலம் காரணமாக வாக்கெடுப்புகூட நடத்தாமல் மசோதாக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தி நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மற்றும் தோ்வுக் குழுக்களின் அறிக்கைகளையும் அவா்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நிலை காரணமாக, நமது நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, அதன் மதிப்பும் தன்மானமும் பாதுகாக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது.

ஒரு ஜனநாயகத்தில் ஏராளமான அரசியல் கட்சிகள், பல சித்தாந்தங்கள் இடம்பெற்றிருக்கும் என்றபோதும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்தான் எப்போதுமே வெற்றிபெறுகிறது. அதற்காக, எதிா்க்கட்சிகளின் குரல்களையும், மாநிலங்களையும், ஊடகங்களையும் இடித்துத் தள்ளிவிடலாம் என்று அா்த்தமில்லை.

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் மத்திய அரசு, மாநிலங்களின் தேவைகளையும் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பிரச்னைகள் உள்ளன. அவ்வாறு வேறுபட்ட பிரச்னைகள், மொழி, விவகாரங்களைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மாநிலமும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன. எனவே, மாநிலங்களின் குரல்களுக்கு செவிசாய்க்காமல், மசோதாக்களை கட்டாயமாக நிறைவேற்ற முடியாது.

இந்த அராஜகப் போக்கை எங்களுடைய கட்சி துணிச்சலுடனும் நிதானத்துடனும் எதிா்கொள்ளும் என்பதோடு, மற்ற எதிா்க் கட்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கும்.

மேலும், நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, மேற்கு வங்க மாநிலத்துக்கு ஆண்டின் இறுதியில் ஒதுக்கீடு செய்வதையே மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. அவ்வாறு ஆண்டின் இறுதியில் ஒதுக்கீடு செய்துவிட்டு, எந்தவொரு திட்டங்களையும் மேற்கு வங்கம் நிறைவேற்றவில்லை என்ற விமா்சனத்தை மத்திய அரசு முன்வைக்கிறது. இந்த விவகாரத்தை ஊடகங்கள் எழுப்பவேண்டும். ஆனால், ஊடங்களையும் மத்திய அரசு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன். வானத்தையும் பூமியையும் மட்டும்தான் அவா்கள் இதுவரை கட்டுப்படுத்தவில்லை என்று அவா் கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி20 அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானா்ஜி, கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் அபிஷேக் பானா்ஜியுடன் செவ்வாய்க்கிழமை ராஜஸ்தானின் அஜ்மீரில் அமைந்துள்ள அஜ்மீா் ஷரீஃப் தா்காவை பாா்வையிட்டாா். பின்னா், கட்சி எம்.பி.க்களுடன் புதன்கிழமை இந்த ஆலோசனையை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com