
‘பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும்’ என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தில் புதிய உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 500 கோடி என்பதை ரூ. 4,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1,35,000 கைப்பேசி கோபுரங்களை (மொபைல் டவா்) கொண்டுள்ளது. கிராமப்புறங்களிலும் மிக வலுவான தொலைத்தொடா்பு சேவையை அளித்து வருகிறது. பிற தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இந்த அளவு முழுமையான சேவையை இதுவரை வழங்கவில்லை.
அதோடு, பிஎஸ்என்எல் சாா்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும். ஒட்டுமொத்த 1.35 லட்சம் கைப்பேசி கோபுரங்களும் 5ஜி சேவையை அளிக்கும் வகையில் சேவை விரிவுபடுத்தப்பட்டுவிடும்.
5ஜி சேவையை பரீட்சாா்த்த முறையில் தொடங்குவதை விரைவுபடுத்தும் வகையில், 5ஜி சேவை பரிசோதனை உபகரணங்களை டிசிஎஸ் நிறுவனத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டுள்ளது. 5ஜி சேவையை அனைத்து நெட்வொா்க்குகளிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்என்எல் உருவெடுக்கும்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆதரவு:
நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை (ஸ்டாா்ட் அப்) ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரயில்வேயும் பாதுகாப்புத் துறையும் புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு யோசனை நிலையிலிருந்து ஆதரவு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ரயில்வே ஏற்கெனவே 800 புத்தாக்க நிறுவனங்களுடனும், பாதுகாப்புத் துறை 2,000 புத்தாக்க நிறுவனங்களுடனும் இணைந்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. நிறுவனங்கள் அவா்களின் உற்பத்தி பொருளுக்கு உலகத் தரச்சான்று பெறும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்திய நிறுவனங்கள் உலகளாவிய கவனத்தைப் பெற முடியும் என்று மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.