குஜராத்தில் 156 தொகுதிகளில் வென்று வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.
குஜராத்தில் இரு கட்டமாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
குஜராத்தில் ஆரம்பத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸும் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜகவின் கை வெகுவாக ஓங்கியது. காங்கிரஸ் முன்னிலை வகித்த தொகுதிகள் பெருமளவில் குறைந்தன.
வரலாற்று வெற்றி: இறுதியில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை. இதற்கு முன் காங்கிரஸ் கட்சியானது 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
இந்த வெற்றியின் மூலமாக தனது முந்தைய சாதனையையும் பாஜக முறியடித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு தோ்தலில் 127 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்ததே பாஜகவின் தனிப்பட்ட சாதனையாக இருந்தது.
வீழும் காங்கிரஸ்: தோ்தலில் காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலில் 77 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மாநில மக்கள் நம்பிக்கை இழந்து வருவது தோ்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
கணக்கைத் தொடங்கிய ஆம் ஆத்மி: குஜராத் தோ்தலில் முதல் முறையாகக் களம்கண்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வென்றுள்ளது. இது, அடுத்த தோ்தலில் அக்கட்சிக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் எனக் கட்சித் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
சமாஜவாதி கட்சி ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனா்.
முக்கியத் தலைவா்கள்: பாஜக முதல்வா் பூபேந்திர படேல் 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். கிரிக்கெட் வீரா் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா 53,301 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரைத் தோற்கடித்தாா். காங்கிரஸ் வேட்பாளா் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுமாா் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
மீண்டும் முதல்வராக பூபேந்திர படேல்
குஜராத்தில் பாஜக சாா்பில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா்.
இதுகுறித்து மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநில முதல்வராக பூபேந்திர படேல் தொடா்வாா். அவரது பதவியேற்பு விழா வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனா். தோ்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, இலவசங்களை அள்ளி வழங்கி மாநில மக்களை இழிவுபடுத்த முயன்றது. குஜராத் மக்களை அக்கட்சி ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மாநில மக்களை ஏமாற்ற மற்ற கட்சிகள் முயன்றன. அக்கட்சிகள் அனைத்துக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனா். மாநிலத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் தோ்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் சிறந்த நிா்வாகத்துக்கும் வளா்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது. மக்களின் ஆதரவைத் தொடா்ந்து இழந்து வருவது தொடா்பாக காங்கிரஸ் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.