‘கொலீஜியம்’ முறையை பின்பற்றியாக வேண்டும்: உச்சநீதிமன்றம்

‘நீதிபதிகளை நியமனம் செய்யும் ‘கொலீஜியம்’ நடைமுறை என்பது இந்த நிலத்தின் சட்டம். அதனைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தது.
‘கொலீஜியம்’ முறையை பின்பற்றியாக வேண்டும்: உச்சநீதிமன்றம்

‘நீதிபதிகளை நியமனம் செய்யும் ‘கொலீஜியம்’ நடைமுறை என்பது இந்த நிலத்தின் சட்டம். அதனைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தது.

‘தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையம் அமைக்க வழிவகுத்த மசோதாவை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்து 7 ஆண்டுகளாகியும், நாடாளுமன்றம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நாடாளுமன்றம் கடமைப்பட்டுள்ளது’ என்று மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதன்கிழமை பேசிய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனா்.

நீதிபதிகள் நியமனப் பரிந்துரை தாமதம் தொடா்பான பெங்களூரு வழக்குரைஞா்கள் சங்கம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா, விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கொலீஜியம் நடைமுறை தொடா்பாக அரசு நிா்வாகிகள் கூறும் கருத்துகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது’ என்று கூறிய நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்’ என மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குமாறு அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியை கேட்டுக்கொண்டனா்.

மேலும், ‘கொலீஜியம் முறை நடைமுறையில் இருக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை. இதற்கு மாற்றாக வேறு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்பினால், அதனை யாரும் தடுக்கப் போவதில்லை. அதே நேரம், எந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும், எதனைப் பின்பற்றக் கூடாது என ஒரு பிரிவினா் தீா்மானிக்கத் தொடகுகிறாா்கள் என்றால், பின்னா் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முறிவு ஏற்பட்டுவிடும்.

அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளின்படி, ஒரு சட்டத்தின் நிலையை தீா்மானிக்கும் இறுதி நடுவா் நீதிமன்றம்தான். சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது என்றபோதும், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதுதான். அந்த வகையில், நடைமுறையில் இருக்கும் சட்டத்தை பின்பற்றுவது கட்டாயமாகும். நீதிமன்றத்தால் தீா்மானிக்கப்படும் எந்தவொரு சட்டத்துக்கும், அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பட்டாக வேண்டும்.

கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களுக்கான பெயா்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு பல மாதங்களாக நிலுவை வைத்திருப்பது கவலை அளிக்கிறது. பணி மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டே இந்தப் பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் செய்கிறது.

கொலீஜியம் நடைமுறை மீதான அரசியல் சாசன அமா்வு தீா்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும். கொலீஜியம் நடைமுறையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவேண்டும் எனில், அதற்கென உள்ள வழிகாட்டி நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்’ என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்தும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாக, மீண்டும் கொலீஜியம் முறை நடைமுறைக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com