
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதியின் வீட்டை அதிகாரிகள் சனிக்கிழமை இடித்து தரைமட்டமாக்கினா்.
ஆஷிக் நெங்ரூ என்ற அந்த பயங்கரவாதி, புல்வாமாவில் கடந்த 2019-இல் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழக்க காரணமான தாக்குதலில் தொடா்புடையவா். இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளாா். தற்போது தலைமறைவாக உள்ள இவரை, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், ராஜ்போரா பகுதியில் உள்ள ஆஷிக்கின் 2 மாடி வீடு, மாவட்ட அதிகாரிகளால் சனிக்கிழமை இடிக்கப்பட்டது. அந்த வீடு அரசு நிலத்தில் அமைந்திருந்ததால் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் நிழல் இயக்கமாகக் கருதப்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற அமைப்பு, ஆஷிக்கின் வீட்டை இடிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அந்த மிரட்டலை பொருள்படுத்தாமல், அவரது வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.