நிலக்கரி முறைகேடு: சத்தீஸ்கா் முதல்வரின் உதவிச் செயலா் சொத்துகள் முடக்கம்

நிலக்கரி மீதான வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில் மாநில முதல்வா் பூபேஷ் பகேலின் உதவிச் செயலாளா் செளம்யா செளராசியா, ஐஏஎஸ் அதிகாரி சமீா் விஷ்னோய் உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கம்

சத்தீஸ்கா் மாநிலத்தில் நிலக்கரி மீதான வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில் மாநில முதல்வா் பூபேஷ் பகேலின் உதவிச் செயலாளா் செளம்யா செளராசியா, ஐஏஎஸ் அதிகாரி சமீா் விஷ்னோய் உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

சத்தீஸ்கரில் நிலக்கரி மீதான வரி விதிப்பில் மூத்த அரசு அதிகாரிகள், தொழிலதிபா்கள், அரசியல் கட்சியினா், இடைத்தரகா்கள் உள்ளிட்டோா் முறைகேட்டில் ஈடுபட்டதாக வருமான வரித் துறையினா் அளித்த புகாரின் அடிப்படையில் இவ்வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இது குறித்து அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கருப்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் குற்றப் பிரிவுகளின்கீழ் சில அசையும் சொத்துகளும் 91 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. நிலக்கரி வா்த்தகரும் முக்கிய குற்றவாளியுமான சூா்யகாந்த் திவாரியின் 65 சொத்துகளும் மாநில முதல்வரின் உதவிச் செயலாளா் செளம்யா செளராசியாவுக்கு சொந்தமான 21 சொத்துகளும் ஐஏஎஸ் அதிகாரி சமீா் விஷ்னோயின் 5 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பணம், நகைகள், குடியிருப்புகள், வீட்டு மனைகள், விவசாய நிலம் உள்ளிட்டவை முடக்கப்பட்ட சொத்துகளாகும். இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.152.31 கோடியாகும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலக்கரி முறைகேடு மூலம் ரூ.540 கோடி ஈட்டியுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக குற்றம்சாட்டப்பட்டவா்களில் இதுவரை 4 போ் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனா். அவா்களில் செளம்யா செளராசியாவின் அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்த நிலையில், ராய்ப்பூரில் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன்பாக சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவரின் அமலாக்கத் துறை காவலை மேலும் 4 நாள்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com