
புதிய மருந்துகளின் பரிசோதனையை விலங்குகள் மீது மட்டும் அல்லாது ஆய்வகங்களில் வளா்க்கப்படும் மனித திசுக்கள் மற்றும் செல்கள் மீதும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகள்-2019இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிதாக உருவாக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்வதில் முன்பரிசோதனைகள் மிக அவசியம். அந்த வகையில், புதிய மருந்துகளின் பரிசோதனையில் புத்தாக்க தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்தும் வகையில் விதிகளை திருத்துவதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, விலங்குகள் மீதான பரிசோதனைக்கு முன்போ அல்லது அதனுடன் இணைந்தோ, ஆய்வகங்களில் வளா்க்கப்படும் மனித திசுக்கள், செல்களின் மீது மருந்துகளைப் பரிசோதித்து பாா்க்க முடியும்.
முன்னதாக, அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிா்வாக நவீனமயமாக்கல் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இம்மசோதாவானது, புதிய மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்வதில், விலங்குகள் மீதான பரிசோதனையுடன் சோ்த்து, மாற்றுமுறை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த மருந்து தயாரிப்பாளா்களை அனுமதிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் மேற்கண்ட விதி திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அறிவிக்கை வெளியிடப்படும்போது, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மருந்து பரிசோதனையில் புத்தாக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விலங்குகள் மீதான வழக்கமான பரிசோதனைகளுடன் புத்தாக்க வழிமுறைகளையும் பயன்படுத்தும்போது, மருந்துகளின் ஆய்வு வெற்றி 70 முதல் 80 சதவீதம் வரை மேம்படும்; பல்வேறு இனக் குழுக்கள் இடையே மருந்துகளின் திறன் வேறுபாட்டைக் கண்டறியவும் இவை உதவும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.