
ராகுல் காந்தி
புதுதில்லி: நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரத்திற்கான 150 நாள்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில், நடைபயணத்தைத் தொடங்கிய அவர், 3,570 கிலோமீட்டர் தூரம் கடந்து அடுத்த ஆண்டு காஷ்மீரில் முடிவடைகிறது.
நடைப்பயணம் இதுவரை, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் இப்போது ராஜஸ்தானின் சில பகுதிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்திய வரலாற்றில் எந்தவொரு இந்திய அரசியல்வாதியும் மேற்கொள்ளாத மிக நீண்ட நடைப்பயணம் இது.
இதனிடையே, நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
बेरोज़गारी के ये आंकड़े भारत के युवाओं की दुर्दशा साफ बताते हैं
— Rahul Gandhi (@RahulGandhi) December 11, 2022
- 100 में 42 युवा बेरोज़गार
- 45 सालों के रिकॉर्ड के पार
प्रधानमंत्री जी, आज देश के युवा की आंखों में नमी और पैरों में छाले हैं, पर वो रुकेगा नहीं - रोज़गार का हक़ लेने तक, भारत जुड़ने तक। pic.twitter.com/z6trCl2B8t
ட்விட்டப் பக்க பதிவில் அவர் வெளியிட்டிருப்பதாவது: நாட்டில் "100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். 45 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளனர். இந்தியாவின் இளைஞர்களின் அவல நிலையை இந்த வேலையின்மை புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பிரதமரே, இன்று நாட்டின் இளைஞர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்புளங்களும் உள்ளன, ஆனால் அவர்கள் தங்கள் வேலைவாய்ப்பைப் பெற்று நாட்டை ஒருங்கிணைக்கும் வரை அவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று ராகுல் கூறியுள்ளார்.
முன்னதாக, டிசம்பர் 8 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வெற்றிக்கு ராகுலின் நடைப்பயணம் பங்களித்துள்ளது என்றார்.
"நாங்கள் ஹிமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள், தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் முயற்சியால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரியங்கா காந்திக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவும் காங்கிரஸ் வெற்றிக்கு உதவியது. சோனியா காந்தியின் ஆசிர்வாதம் எங்களுக்கு உள்ளது" என்று கார்கே கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...