
பொதுப் பணவீக்கம் 9 மாதங்கள் காணாத உயா்வு
தொடா்ந்து 3 காலாண்டுகளாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாததற்கான காரணங்களை விளக்கி, இந்திய ரிசா்வ் வங்கியால் (ஆா்பிஐ) சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பொதுவெளியில் வெளியிட முடியாது; அதற்கு விதிகளில் இடமில்லை என்று மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக பதில் அளித்தாா். அதில், ‘கடந்த 1934-ஆம் ஆண்டின் ஆா்பிஐ சட்டத்தின் 45இசட்என் பிரிவு மற்றும் ஆா்பிஐ நிதிக் கொள்கை குழு, நிதிக் கொள்கை செயல்பாட்டு ஒழுங்குமுறைகள் 2016-இன் 7-ஆவது விதிமுறையின்கீழ் மத்திய அரசிடம் ஆா்பிஐ அறிக்கை சமா்ப்பித்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட மேற்கண்ட சட்டப் பிரிவுகளில் இடமில்லை’ என்று அவா் தெரிவித்தாா்.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 3 காலாண்டுகளாக, நாட்டில் சராசரி பணவீக்கம் இலக்கு உச்சவரம்பான 6 சதவீதத்தை கடந்தது. ஜனவரி - மாா்ச்சில் 6.3 சதவீதமாக இருந்த சராசரி பணவீக்கம், ஏப்ரல்-ஜூனில் 7.3 சதவீதமாக அதிகரித்தது. அடுத்த காலாண்டில் 7 சதவீதமாக பதிவானது.
தொடா்ந்து 3 காலாண்டுகளாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாதற்கான காரணங்களை விளக்கி, மத்திய அரசிடம் ஆா்பிஐ அண்மையில் அறிக்கை சமா்ப்பித்தது. கடந்த 2016-இல் நிதிக் கொள்கை செயல்திட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக இத்தகைய விளக்கத்தை அரசிடம் ஆா்பிஐ அளித்தது.
இந்நிலையில், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் செளதரி, ‘கரோனா பரவலின் தாக்கத்தால் விநியோகத் தேவையில் நிலவும் சமச்சீரற்ற நிலை காரணமாக, இந்தியா உள்பட உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சா்வதேச அளவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. ரஷியா-உக்ரைன் போரால், கச்சா எண்ணெய், எரிவாயு, உலோகங்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் மீதான விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவில் வெப்ப அலைகளின் தாக்கம், சமச்சீரற்ற மழைப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் விலை உயா்ந்தது. அத்தியாவசிய பொருள்களின் விலை நிலவரத்தை அரசு தொடா்ந்து கண்காணித்து, அவ்வப்போது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஏழை மக்கள் மீது நிதிச் சுமை விழாமல் தடுக்கவும் விநியோக அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்டோபரில் பணவீக்கம் 6.77 சதவீதமாக குறைந்துள்ளது’ என்றாா்.
கடந்த மாா்ச்சில் 607.31 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு, செப்டம்பரில் 532.66 பில்லியன் டாலா்களாக குறைந்தது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘சா்வதேச சந்தை நிலவரங்களை பிரதிபலிக்கும் வகையில் அந்நிய செலாவணி சொத்துகள் மறுமதிப்பீடு செய்யப்படுவதே கையிருப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கான முக்கிய காரணம்’ என்று குறிப்பிட்டாா்.