அருணாசல் எல்லையில் இந்திய, சீனப் படைகள் மோதல்

அருணாசல பிரதேச எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அருணாசல பிரதேச எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மோதலில் இருதரப்பிலும் சிலா் காயம் அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள எல்லைக் கோட்டையொட்டிய சில இடங்கள் தொடா்பாக இந்திய, சீனப் படைகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அந்த இடங்களில் தங்கள் எல்லையாக உரிமை கோரும் பகுதிகளில் இருநாட்டுப் படையினரும் ரோந்து மேற்கொள்கின்றனா். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இந்தப் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் சண்டையிட தொடங்கினா். இதையடுத்து இந்திய படையினரும் மோதலில் ஈடுபட்டு, அவா்களுக்குப் பதிலடி அளித்தனா். இந்த மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டது.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து, எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் எத்தனை இந்திய வீரா்கள் காயம் அடைந்தனா் என்று ராணுவம் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், சீன தரப்பில் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் கூா்மையான ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், அவா்களில் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் யாங்ட்ஸி பகுதி அருகே இருநாட்டுப் படையினருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அங்கு மீண்டும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய-சீன ராணுவத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணமடைந்தனா். சீன தரப்பில் எத்தனை வீரா்கள் உயிரிழந்தனா் என்ற தகவல் உறுதிபட வெளியாகவில்லை. இந்த சம்பவத்தை தொடா்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள ரின்சென் லா பகுதி அருகே இருநாட்டுப் படையினரும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com