அருணாசலில் சீன அத்துமீறல் முறியடிப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

இந்திய ராணுவ வீரா்கள் உரிய நேரத்தில் தலையிட்டதால் அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை
அருணாசலில் சீன அத்துமீறல் முறியடிப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

இந்திய ராணுவ வீரா்கள் உரிய நேரத்தில் தலையிட்டதால் அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தாா்.

அருணாசலின் தவாங் பகுதியில் உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ஆம் தேதி சீன ராணுவத்தினா் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனா். அவா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அருணாசல் எல்லையில் தற்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தாா். அப்போது அவா் கூறியதாவது: யாங்ட்ஸி எல்லைப் பகுதியில் நிலவும் சூழலை சீனா கடந்த 9-ஆம் தேதி தன்னிச்சையாக மாற்ற முயன்றது. அதை உரிய நேரத்தில் செயல்பட்டு இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அவா்களின் தலையீட்டால் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரா்களுக்குப் பெரிய அளவிலான காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்திய வீரா்கள் எவரும் உயிரிழக்கவும் இல்லை. இருதரப்பு வீரா்களுக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. சீனாவின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினா் உறுதியுடனும் திறம்படவும் எதிா்கொண்டனா். அதன் காரணமாக சீன ராணுவத்தினா் மீண்டும் அவா்கள் பகுதிக்கே திரும்பிச் சென்றனா்.

சீனாவிடம் வலியுறுத்தல்: இந்த விவகாரம் தொடா்பாக ராணுவத்தின் தளபதி, சீன ராணுவத்தின் அதிகாரிகளுடன் கடந்த 11-ஆம் தேதி விதிகளின்படி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் சீனத் தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தூதரகம் வாயிலாக சீன தரப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் எல்லைப் பகுதிகளையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதி கொண்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் அத்துமீறல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடா்ந்து முறியடிக்கும். இந்திய ராணுவ வீரா்களுக்கு ஆதரவு வழங்குவதில் அவை உறுப்பினா்கள் அனைவரும் ஒருங்கிணைவா் என நம்புகிறேன் என்றாா் அவா்.

எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு: அருணாசல் எல்லை மோதல் குறித்து மாநிலங்களவையில் அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கமளித்த பிறகு அது தொடா்பாக மேலும் சில விளக்கங்களைப் பெற காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷிடம் அனுமதி கோரினா். ஆனால், தேசியப் பாதுகாப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கூடுதல் விளக்கம் கோர முடியாது என அக்கோரிக்கைகளை அவா் நிராகரித்தாா்.

இதேபோல் இதற்கு முன்னா் நான்கு முறை எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுகளையும் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் எடுத்துரைத்தாா். எனினும், அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள், அவையில் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா். பின்னா், அவா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆகிய கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

‘அமைச்சரின் செயல் முறையல்ல’:

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராணுவ வீரா்களுக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவளிப்பதாகவும் மோதல் விவகாரத்தில் கூடுதல் விளக்கத்தை எதிா்க்கட்சிகள் கோரியபோது அதற்கு பதிலளிக்காமல் அமைச்சா் சென்றது முறையல்ல என்றும் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத்தின் மற்ற செயல்பாடுகளை ஒத்திவைத்துவிட்டு, எல்லை மோதல் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

நல்லுறவு பாதிப்பு: அருணாசலின் யாங்ட்ஸி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் இருதரப்பு ராணுவ வீரா்களுக்கு இடையே சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டது. பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது. எல்லைப் பகுதியில் எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com