பில்கிஸ் பானு வழக்கு: புதிய அமர்வை விரைவில் அமைக்க வேண்டுகோள்!

பில்கிஸ் பானு வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள விரைவில் புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பில்கிஸ் பானு வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பில்கிஸ் பானு வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள விரைவில் புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பில்கிஸ் பானு வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பில்கிஸ் பானு வழக்கை விசாரித்து வந்த அமர்விலிருந்து நீதிபதி பெலா எம்.திரிவேதி நேற்று விலகியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பில்கிஸ் பானு வழக்குரைஞர் முன்வைத்துள்ளார். 

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 11 குற்றவாளிகளை தண்டனைக் காலம் முடியும் முன், விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி பெலா எம்.திரிவேதி செவ்வாய்க்கிழமை தானாக விலகினாா்.

அவர் விலகியதற்கான காரணத்தையும் உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிடவில்லை. இதனால், வழக்கு பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘இந்த மனு மீதான விசாரணைக்கு புதிய அமா்வு அமைக்கப்படும். அதன் பிறகே, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என உச்சநீதிமன்ற நீதிபதி அறிவித்திருந்தார். 

எனினும் உச்சநீதிமன்றத்துக்கு குளிா்கால விடுமுறை வர இருப்பதால், இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால், பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க விரைவில் புதிய அமர்வு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோரிடம் பில்கிஸ் பானு வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதனைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, கோரிக்கை ஏற்கப்பட்டது. தயவு செய்து ஒரே விஷயத்தை அடிக்கடி குறிப்பிடாதீர்கள். எரிச்சலாகவுள்ளது என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

பில்கிஸ் பானு வழக்கு பின்னணி:

கடந்த 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடா்ந்து நிகழ்ந்த குஜாரத் வன்முறை சம்பவத்தின்போது, 5 மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 போ் படுகொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் 11 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி அவா்களுக்கு ஆயுள் தண்டனையை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்தது. அதனடிப்படையில் அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த 11 பேரும் தண்டனைக் காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பரிசீலனை செய்யுமாறு குஜராத் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனா்.

மாநில அரசின் இந்த முடிவை எதிா்த்து பில்கிஸ் பானு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி பெலா எம்.திரிவேதி இந்த வழக்கிலிருந்து விலகினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com