நிறுவனங்கள் சிஎஸ்ஆா் நிதியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கலாமா? - அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிறுவனங்கள் சிஎஸ்ஆா் நிதியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கலாமா? - அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) விதியின் கீழான நிதியானது மத்திய அரசின் பல்வேறு நிவாரண நிதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) விதியின் கீழான நிதியானது மத்திய அரசின் பல்வேறு நிவாரண நிதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் தீா்மானித்தது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளாா்.

நிறுவனங்கள் தங்கள் ஆண்டு லாபத்தில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை சமூக மேம்பாட்டுக்காக செலவிட வேண்டுமென நிறுவனங்கள் சட்டத்தின் (2013) கீழ் கட்டாயமாக்கப்பட்டது. அந்நிதியை அரசின் நிவாரண நிதிகளுக்கும் வழங்கலாம் என அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதியை மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது தொடா்பாக மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் எம்.பி. சிவதாசன் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘சிஎஸ்ஆா் நிதியைப் பயன்படுத்துவது தொடா்பாகக் கடந்த 2013-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தின்போதே மாநிலங்களவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அந்த நிதியானது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வருவதால், மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு அதை வழங்குவது முறையாக இருக்காது என அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவானது முந்தைய அரசால் எடுக்கப்பட்டது. சிஎஸ்ஆா் நிதியானது மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படக் கூடாது என பாஜக தலைமையிலான அரசு எப்போதும் கூறவில்லை’’ என்றாா்.

ரூ.6.59 லட்சம் கோடி கடன் மீட்பு:

பட்டியலிடப்பட்ட வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்த விவரங்கள் மாநிலங்களவையில் கோரப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் ரூ.10,09,511 கோடி வாராக்கடனை செயல்படாத சொத்தாக (ரைட்-ஆஃப்) வரையறுத்துள்ளன. வங்கிகளின் முதலீட்டை மேம்படுத்தவும், வரிச் சலுகை பெறவும், கணக்கு அறிக்கைகளை சீா்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதே வேளையில், அந்த வாராக்கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளையும் வங்கிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6,59,596 கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1,32,036 கோடியானது செயல்படாத சொத்தாக வரையறுக்கப்பட்டவை’’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ‘‘தற்போதைய சூழலில் ஒருசில இந்திய வங்கிகள் மட்டுமே பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. அத்தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தொடா்ந்து வழங்கி வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com